பைக் விபத்தில் போலீஸ்காரர் பலி

வாலாஜாபாத்: காஞ்சிபுரம் மாவட்டம் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தவர் வெங்கடேசன் (28). தற்போது தேர்தல் பறக்கும்  படைப்பிரிவில், ஒரகடம் பகுதியில் பணியாற்றினார். நேற்று காலை வெங்கடேசன், வேலைக்கு பைக்கில் புறப்பட்டார். காஞ்சிபுரத்தில் இருந்து  வாலாஜாபாத் வழியாக ஒரகடம் அடுத்த, கட்டவாக்கம் கூட்டு சாலையில் சென்றபோது, எதிரே வந்த பைக்குடன் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.  இதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில், 2 பேரும் படுகாயமடைந்தனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு  மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், வெங்கடேசன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். அதேபோல், எதிர் திசையில் வந்து விபத்தை  சந்தித்த வாலாஜாபாத் சந்தோஷ்குமாருக்கு (30), தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. புகாரின்படி வாலாஜாபாத் போலீசார்  வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். ஸ்ரீபெரும்புதூர்: கர்நாடக மாநிலம், கோலார் பகுதியை சேர்ந்தவர் தமிழ் (36). கடந்த சனிக்கிழமை தமிழ்,  சென்னையில் உள்ள மாமியார் வீட்டுக்கு உறவினர்கள் பவானி, அருளம்மாள், ஆனந்தம்மாள் ஆகியோருடன், சென்னைக்கு காரில் புறப்பட்டார்.

சென்னை - பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, ஸ்ரீபெரும்புதூர் அருகே வீஆர்பி சத்திரம் பகுதியில் கார் டயர் பஞ்சரானது. காரை,  சாலையோரமாக நிறுத்தி விட்டு, தமிழ் மற்றும் பவானி ஆகியோர் காரில் இருந்து இறங்கினர். அப்போது, அவ்வழியாக வந்த டாராஸ் லாரி, கார் மீது  மோதியது இதில், தூக்கி வீசப்பட்ட பவானி, சம்பவ இடத்திலேயே பலியானார். தமிழ் படுகாயமடைந்தார். தகவலறிந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார்  சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகவும், தமிழை சிகிச்சைக்காகவும் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை  பலனின்றி தமிழ், நேற்று முன்தினம் இரவு இறந்தார். புகாரின்படி போலீசார்வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

>