அரசு நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக மாதந்தோறும் ஆய்வு செய்து நடவடிக்கை: கலெக்டர் மஞ்சுநாத் அதிரடி

பெங்களூரு:  அரசு நிலம், ஏரி ஆக்கிரமிப்பு தொடர்பாக மாதந்தோறும் ஒரு நாள் சிறப்பு ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் மஞ்சுநாத் கூறினார். பெங்களூரு மாவட்ட கலெக்டர் மஞ்சுநாத் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,  அரசு நிலங்களை பாதுகாப்பதற்காக தனி கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் இதற்காக ஒதுக்கப்படும். அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து அதை சொந்தமாக்கிக்கொள்ளும் நடவடிக்கைக்கு ஒருபோதும் வெற்றி கிடைக்காது. இதற்கு துணை போகும் அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு நிலத்தை போல் ஏரிகள், கால்வாய் உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏரிகளின் பரப்பு குறைந்தால் அது ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் பாதிப்பாக அமையும். நிலத்தடி நீர் மட்டம் ஏற்கனவே குறைந்து கொண்டு இருக்கும் நிலையில் ஏரிகள் ஆக்கிரமிப்பு தடுக்கப்படவில்லை என்றால் அது மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும்.

இது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுவரை மாவட்டத்தில் 827 ஏரிகள் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு எல்லைகள் அளந்து பரிசீலனை செய்யப்பட்டுள்ளன. ஏரி ஆக்கிரமிப்பு முழுமையாக அகற்றப்பட்டு உரிய நடவடிக்கை எடுத்துள்ளோம். அரசு நிலம் மற்றும் ஏரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை தடுக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  அனுமதி இல்லாமல் லே அவுட் அமைப்பது உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் அனைத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கிரமிப்பு தொடர்பான அறிக்கையில் கூறப்பட்டுள்ள விபரங்கள் முழுமையாக பரிசீலனை செய்யப்பட்டு அதன் மீது விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஏரிகள், நடைபாதை மற்றும் அரசு சொத்து ஆக்கிரமிப்பு தொடர்பாக பொதுமக்கள் தகவல் அளிக்க வேண்டும். ஏரிகளில் தேவையற்ற முறையில் யாராவது குடிசை அமைத்தால் அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு உடனடியாக தெரிவிக்கவேண்டும்’’, என்றார்.

Related Stories: