டின்பேக்டரியில் சேதமடைந்துள்ள நிழற்குடையால் பயணிகள் பாதிப்பு: சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை

பெங்களூரு: டின்பேக்டரி பஸ் நிலையத்தில் சேதமடைந்துள்ள பஸ் நிழற்குடையை சீரமைத்து கொடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்தனர். பெங்களூரு கே.ஆர்.புரம் தொகுதிக்கு உட்பட்ட டின்பேக்டரி பஸ் நிலையத்திலிருந்து மெஜஸ்டிக், கே.ஆர்.மார்க்கெட், ஹெப்பாள் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் பல ஆயிரம் மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.  அப்படி பயணம் செய்யும் மக்கள் பஸ் வரும் வரை காத்திருக்க வசதியாக  நிழற்குடை அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. நிழற்குடை அமைத்து பல ஆண்டுகள் கடந்துள்ளதால் பலத்த சேதமடைந்து அமருவதற்கு கூட வசதி இல்லாமல் உள்ளது. இதனால் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு சேதமடைந்துள்ள பஸ் நிழற்குடையை சீரமைத்து கொடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக மக்கள் கூறியதாவது: டின்பேக்டரி பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மக்கள் இந்த பஸ் நிலையத்திலிருந்து தான் பல்வேறு பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர்.

அதிக கூட்டம் வரும் இந்த பஸ் நிலையத்தின் நிழற்குடை பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்துள்ளது. அதே போல் அமர்வதற்கு ஏற்ற இடமாக இல்லாமல் உள்ளதால், நிழற்குடையில் நிற்காமல் வெளியே நின்று பஸ் ஏறி செல்ல வேண்டியுள்ளது. இதில் வெயில், மழை காலங்களில் பாதிப்பு ஏற்படுகிறது. அதே போல் மூத்த குடிமகன்கள், நோயாளிகள், கர்ப்பிணிகளுக்கும் தொந்தரவு ஏற்படுகிறது. இதனால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு சேதமடைந்துள்ள நிழற்குடையை சீரமைத்து கொடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: