சொன்னாரே! செஞ்சாரா? ஜெயிக்க வைத்த தொகுதி மக்களுக்கு எந்த கைமாறும் செய்யாத எம்எல்ஏ: கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதி எம்எல்ஏ கீதா

கரூர் மாவட்டத்தில் கரூர், குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் என 4 சட்டமன்ற தொகுதிகளில் கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதியாக உள்ளது. கிருஷ்ணராயபுரம் தொகுதியில் எம்எல்ஏவாக அதிமுகவை சேர்ந்த கீதா உள்ளார். 2016 சட்டமன்ற தேர்தலின்போது இவரை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் புதிய தமிழகம் கட்சியை சேர்ந்த வி.கே.அய்யர் போட்டியிட்டார். ஆளுங்கட்சி எம்எல்ஏவாக உள்ள கீதா, தேர்தல் பிரசாரத்தின்போது தரகம்பட்டியில் அரசு கலைக்கல்லூரி, கடவூரில் தீயணைப்பு நிலையம் கொண்டு வரப்படும். வெற்றிலை, வாழை ஆகியவற்றை பாதுகாக்க குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும்.

அதிகளவு தொழிலாளர்களை கொண்ட இந்த தொகுதி மக்களின் வாழ்வாதாரம் காத்திட தொழில் நிறுவனங்கள் அமைக்கப்படும் என தெரிவித்திருந்தார். தரகம்பட்டியில் அரசு கலைக் கல்லூரிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, அரைகுறை கட்டிட வசதியுடன் தான் தற்போது கல்லூரி செயல்பாட்டில் உள்ளது. குளிர்பதன கிடங்கு, தீயணைப்பு நிலையம் அப்படியே கிடப்பிலே கிடக்கிறது. குளித்தலை கரூர் இடையே உள்ள சாலையில் அடிக்கடி விபத்து நடப்பதால் இடைப்பட்ட பகுதியில் விபத்து அவசர சிகிச்சை மையம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 5 வருடமாக இருந்து வருகிறது.

கரூரில் செயல்படும் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்களில் கடவூர், தரகம்பட்டி, கிருஷ்ணராயபுரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாகனங்களில் கரூருக்கு வேலைக்கு சென்று வருகின்றனர். இதுபோன்ற தொழிலாளர்கள், கரூருக்கு செல்லாமல் இந்த பகுதியிலேயே பாதுகாப்புடன் பணியாற்ற டெக்ஸ்டைல்ஸ் பூங்கா அமைத்து தர வேண்டும். கிருஷ்ணராயபுரம் தொகுதிக்குட்பட்ட மணவாசி பகுதியில் வேளாண் கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் அப்படியே கிடக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளாக இந்த தொகுதியில் எம்எல்ஏவாக இருந்து வரும் அதிமுகவை  சேர்ந்த யாரும் இந்த கோரிக்கையை நிறைவேற்றவில்லை. தொகுதிக்குள் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட செய்து தரவில்லை. வாக்குறுதிகள் எல்லாம் காற்றில் பறந்துபோன கதையாகத்தான் இதுநாள் வரை இருந்து வருகிறது. ‘அதிமுகவை 2 முறை தொடர்ந்து ஜெயிக்க வைத்தோம். ஆனால் பதிலுக்கு இதற்கு முன்னாள் இருந்த எம்எல்ஏ காமராஜும் சரி, பெண் ஒருவர் நிற்கிறாரே என நினைத்து ஜெயிக்க வைத்த தற்போதைய சிட்டிங் எம்எல்ஏ கீதாவும் சரி தொகுதி மக்களுக்கென எந்த கைமாறும் செய்யவில்லை. 3வது தடவையும் ஜெயித்து விடலாம் என கற்பனையில் அதிமுகவினர் இருக்கிறார்கள். இந்த முறை அதிமுகவினர் ஓட்டு கேட்டு வரட்டும். என்ன நடக்குது என பாருங்க. அப்போது அவர்களுக்கு புரியும்’ என்கின்றனர் தொகுதி மக்கள்.

* ரூ.81 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வந்தேன்

எம்எல்ஏ கீதா கூறும்போது, ‘தேர்தலின்போது தொகுதி மக்களுக்கென கொடுத்த வாக்குறுதிகளை 5 வருடத்தில் எனது மனசாட்சிப்படி நிறைவேற்றியுள்ளேன். கிருஷ்ணராயபுரம் தொகுதிக்குட்பட்ட தாந்தோணி ஒன்றியத்தில் ரூ.81 கோடியே 49 லட்சம் மதிப்பில் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தொகுதியில் 6 பள்ளிகள் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 4 பகுதி நேர நியாய விலைக்கடைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. தரகம்பட்டியில் புதிதாக அரசு கலைக்கல்லூரி, கிருஷ்ணராயபுரம் பகுதியில் நீதிமன்றம், தரகம்பட்டியில் திருச்சி மத்திய கூட்டுறவு வங்கியின் கிளையும் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணராயபுரம் தொகுதிக்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து சட்டமன்றத்திலும் பலமுறை குரல் எழுப்பியுள்ளேன்’ என்றார்.

* ‘லாபம் அடைந்த எம்எல்ஏ உறவினர்கள்’

மேற்கு திமுக ஒன்றிய செயலாளர் கட்டளை ரவிராஜா கூறும்போது, ‘கிருஷ்ணராயபுரம் தொகுதியில் எம்எல்ஏ கொடுத்த பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக, இந்த தொகுதியில் வாழை, வெற்றிலை அதிகளவு  விளைவிக்கப்படுகிறது. இதனை பாதுகாக்க குளிர்பதன கிடங்கு தேவை என்ற கோரிக்கை 10 வருடமாக இருந்து வருகிறது. எந்த கோரிக்கைகளுக்குமே ஆளுங்கட்சி எம்எல்ஏ கொஞ்சம் கூட செவிசாய்க்கவில்லை. மணவாசி பகுதியில், எம்எல்ஏவின் உறவினர்கள் சிலர், மணல் லாரிகள் நிறுத்த டர்னிங் பாய்ன்ட் அமைக்க அனுமதி பெற்றுள்ளனர். தொகுதியை சேர்ந்தவர்களுக்கு உதவாமல் பிற மாவட்டங்களை சேர்ந்த மணல் லாரி நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு முன்னுரிமை டோக்கன்களை வழங்கி லாபம் பார்த்துள்ளனர். கொரோனா காலத்தில், தொழிலாளர்கள் வீட்டில் முடங்கி இருந்த நேரத்தில் தொகுதி எம்எல்ஏ என்ற பெயரில்கூட வந்து ஆறுதலோ கூறவில்லை. எந்த உதவியும் வழங்கவில்லை’ என்றார்.

* 2 பேர் மட்டுமா? கடுகடுத்த கலெக்டர்

வேலூரில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்துவது தொடர்பாக மண்டப உரிமையாளர்கள், வாகன உரிமையாளர்கள் என ஒவ்வொருவரையும் அழைத்து கலெக்டர் சண்முக சுந்தரம் வழிகாட்டி நெறிமுறைகள் தொடர்பாக பேசி வருகிறார். நேற்று காலையும் நோட்டீஸ், துண்டு பிரசுரங்கள், செய்தி அறிக்கைகள், பேனர்கள் அச்சிடும் பிரிண்டிங் பிரஸ், டிடிபி சென்டர், டிஜிட்டல் பேனர் உரிமையாளர்கள் கூட்டம் நடந்தது. இதற்காக 200க்கும் மேற்பட்டவர்களுக்கு அழைப்பும் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் கூட்டத்தில் வெறும் 2 பேர் மட்டுமே வந்திருந்தனர். இதுதெரியாமல் கூட்ட அரங்கில் நுழைந்த கலெக்டர் சண்முகசுந்தரம் கடுப்பானார்.

‘‘என்ன 2 பேர் மட்டும்தான் வந்திருக்காங்களா?, எல்லாருக்கும் சொன்னீர்களா? என்று கேட்க அதிகாரிகளோ, 200க்கும் மேற்பட்டவர்களுக்கு சொல்லி நேரமும் மதியம் 12 மணி என்று சொன்னோம் என்றனர். 12.30 மணி ஆகிறது, இன்னும் ஆட்களை காணோமே’’ என்று அதிகாரிகளை பார்த்து கடு, கடுத்தார் கலெக்டர். மேலும் மைக்கில் யாராவது வெளியில் இருந்தால் உள்ளே வாருங்கள் என்றும் அழைப்பு விடுத்தார். ஆனால் வந்தது 2 பேர் மட்டுமே என்பதால் அவர்கள் தேமே என்று அமர்ந்திருந்தனர். இதனால் வந்தவர்களிடம், ‘‘விதிகளை மீறும் பிரிண்டிங் பிரஸ், அச்சகம், டிடிபி சென்டர், டிஜிட்டல் பேனர் அச்சடிக்கும் மையம்’’ ஆகியவை 6 மாதங்களுக்கு மூடப்படுவதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீதும் கடும் நடவடிக்கை பாயும் என்று எச்சரித்து 2 நிமிடத்துடன் கூட்டத்தை முடித்து கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியேறினார்.

Related Stories: