ஹலோ சார்... எலெக்‌ஷன் கண்ட்ரோல் ரூமா? வடிவேலு பாணியில் வந்த போன்கால்

ஒரு படத்தில் நடிகர் வடிவேலு, பார் ஓனருக்கு போன் போட்டு, ‘ஹலோ பிரபா ஒயின் ஷாப்பா, கடை எப்ப சார் திறப்பீங்க’ன்னு கேட்டு கலாய்ப்பாரு. அந்த பாணியில, வேலூர்ல ஒரு சம்பவம் நடந்திருக்கு. வேலூர் மாவட்டத்துல தேர்தலுக்காக 2 நாளைக்கு முன்னாடி கட்டுப்பாட்டு அறைய திறந்தாங்க. தேர்தல் பிரிவு ஊழியர்களும், புகாரை பதிவு செய்றதுக்கு தாயாரா இருந்தாங்க. அப்போ, தேர்தல் பிரிவுக்கு ஒரு அழைப்பு வந்துச்சு. முதல் அழைப்பு திடீர்னு வந்ததால, அந்த அழைப்ைப எடுக்கும்போது, புகாரை நோட் பண்றதுக்காக பேனா எடு, பேப்பர எடுன்னு, ஆர்வத்தோட ஆரம்பிச்சிருக்காங்க.

அப்போ, எதிர்முனையில் பேசியவர், ‘ஹலோ... சார்... இது எலெக்‌ஷன் கண்ட்ரோல் ரூமா’ன்னு கேட்க.., ‘ஆமாம் சார், இது எலெக்‌ஷன் கண்ட்ரோல் ரூம்தான். உங்க புகாரை சொல்லுங்க’ன்னு கேட்டிருக்காங்க. அதுக்கு அந்த ஆசாமி, ‘இல்ல... பேப்பர்ல இந்த நம்பரு போட்டிருந்தாங்க. அதான், கண்ட்ரோல் ரூம் நம்பர் சரியா வேலை செய்யுதான்னு, செக் பண்ணினேன், புகார் கொடுத்தா உடனே நடவடிக்கை எடுப்பீங்களா’ன்னு கூலா கேட்டுட்டு, கட் பண்ணிட்டாராம். ‘இப்படி முதல் போன்காலே, வடிவேலு பாணியில இருந்தா, எலக்‌ஷன் முடியுற வரைக்கும், இவங்க தொல்லை ஓயாது போல இருக்கே’ன்னு ஊழியருக்கு புலம்பிட்டாங்களாம்.

* தேர்தல் கூட்டங்களை கண்காணிக்க களமிறங்கும் சுகாதாரத்துறை

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட கடந்த 26ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டது. தேர்தலையொட்டி, தேர்தல் ஆணையம் பணம், பரிசு பொருட்கள் நடமாட்டத்தை கண்காணிக்க மாவட்டம்தோறும் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு அமைத்து சோதனையை தீவிரப்படுத்தி உள்ளது. தற்போது, கொரோனா பரவல் சில மாநிலங்களில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு இந்திய தேர்தல் ஆணையம், தேர்தல் நடக்கும் மாநிலங்களில், தேர்தல் பணிகளில் சுகாதாரத்துறையும் ஈடுபட உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா வைரஸ் இன்னும் முழுவதுமாக விட்டு போகவில்லை. இப்போதைய சூழலில் பொதுக்கூட்டங்கள், தேர்தலுக்காக மக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகியவற்றில் சுகாதாரத்துறையினர் பணி செய்ய உத்தரவு வந்துள்ளது. இத்தனை நாட்களாக பொதுக்கூட்டம் நடந்த இடங்களை சுத்தம் செய்வது, சுண்ணாம்பு தெளிப்பது போன்ற பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. இப்போது கொரோனா சூழலில் கூட்டத்துக்கு வருபவர்கள் முககவசம் அணிந்துள்ளனரா? சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்ய உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: