குமரியில் 6 தொகுதியும் லபக்...பாஜ பிடிவாதம்: அதிமுக அதிர்ச்சி

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுடன், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. பா.ஜ. சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனே களமிறக்கப்படலாம் என்று பரவலான பேச்சு உள்ளது. சட்டமன்ற தொகுதிகளை பொறுத்தவரை கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளையும் அதிமுக தன் வசம் வைத்துக் கொண்டு, மீதி 4 தொகுதிகளை பா.ஜ.வுக்கு தள்ளி விட முடிவு செய்திருந்தது. இந்த 4 தொகுதிகளிலும் திமுக, காங்கிரஸ் வலுவாக உள்ளது.

தற்போது பா.ஜ. மேலிடம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளையும் தங்களுக்கே தருமாறு கேட்டுள்ளது. நாடாளுமன்ற இடைத்தேர்தலும் நடப்பதால், வாக்கு சேகரிப்பு, பூத் கமிட்டி அமைப்பு உள்ளிட்ட எல்லா பணிகளையும் ஒருங்கிணைந்து செய்யும் வகையில் 6 தொகுதிகளையும் எங்களுக்கே தந்தால் தான் சிறப்பாக இருக்கும் என கூறி உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை அதிமுக செல்வாக்கு இழந்த நிலையில் உள்ளது. தேர்தல் வேலை செய்வதிலும் நிச்சயம் ஆர்வமாக இருக்க மாட்டார்கள் என அதிமுக தலைமைக்கு உளவுத்துறை மூலம் தகவல் சென்று உள்ளது. எனவே 6 தொகுதிகளையும் பா.ஜ.விடமே கொடுத்து விட்டு, அதற்கு மாறாக வேறு மாவட்டங்களில் உள்ள தொகுதிகளை கூடுதலாக  வைத்துக் கொள்ளலாம் என்றும் அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளதாம். அமித்ஷா பேச்சுவார்த்தையின்போது இந்த 6 தொகுதிகள் குறித்தும் பேசி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உள்ளூர் அதிமுகவினர் அதிர்ச்சியில் உள்ளார்களாம்.

* மீடியாவுக்கு ஓபிஎஸ் மகன் வச்ச விருந்து

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடக்கிறது. இதற்கான நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓபிஎஸ்சின் சொந்த ஊரான பெரியகுளத்திற்கு அருகே கைலாசபட்டியில் அவரது பண்ணை வீடு இருக்கிறது. ஓபிஎஸ்சின் இளைய மகன் ஜெயபிரதீப், இங்கு செய்தியாளர்களை அழைத்து சிறப்பு விருந்து கொடுத்திருக்கிறார். பொதுவாக பிரஸ்மீட் என்றால், ஏதாவதொரு தகவல் தெரிவிக்க, செய்தியாளர்கள் போட்டோ, செய்தி எடுத்துக் கொண்டு திரும்புவார்கள்.

ஆனால் இந்த விருந்து நிகழ்ச்சியில் பண்ணை வீட்டிற்குள் சென்ற செய்தியாளர்களை செய்தி, போட்டோ எடுக்கவோ, ஒளிப்பதிவு செய்யவோ அனுமதிக்கவில்லை. கடந்த பத்தாண்டுகளில் தங்களது சாதனைகளில் எதனை மக்களிடம் சொன்னால் எடுபடும், ஓட்டுப்போடும் மக்களைக் கவர, எந்த மாதிரியான வாக்குறுதி அளிக்கலாம் என்று செய்தியாளர்களிடமே, ஓபிஎஸ்சின் இளைய மகன் கலந்து பேசி இருக்கிறார். அத்தோடு, விருந்து உபசரிப்பின்போது தானே களமிறங்கி கேட்டு கேட்டு விருந்து பரிமாறி இருக்கிறார்.

Related Stories: