அதிமுக கூட்டணியில் இழுபறி நீடிக்கும் நிலையில் தூத்துக்குடி - திருச்செந்தூர் ரெண்டில் ஒண்ணு வேணும்: பாஜ அடம்

அதிமுக கூட்டணியில் தூத்துக்குடி அல்லது திருச்செந்தூர் தொகுதியை தங்களுக்கு ஒதுக்கவேண்டும் என பாஜ அழுத்தம் கொடுத்து வருகிறது. அதிமுக கூட்டணியில் பாஜ இடம் பெறுவது உறுதியாகிவிட்டது. ஏற்கனவே பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது பாஜகவுடன் தொகுதி ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் அதிமுக தலைமை ஈடுபட்டு வருகிறது. அதில் தென் மாவட்டங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரதிநிதித்துவம் இருக்கும் வகையில் பாஜ பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி அல்லது திருச்செந்தூர் தொகுதியை தங்களுக்கு தர வேண்டும் என பாஜ அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியை பாஜவிற்கு ஒதுக்கினர்.

எனவே இந்த முறையும் எப்படியும் தூத்துக்குடி தங்களுக்கு கிடைக்கும் என்று பாஜவினர் நம்புகின்றனர். ஏற்கனவே அதிமுகவில் தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ தனது ஆதரவாளருக்கு தூத்துக்குடி தொகுதியை பெற்று விட வேண்டும் என்று முயற்சி எடுத்து வருகிறார். தமிழ்நாடு பார்கவுன்சில் உறுப்பினர் வழக்கறிஞர் மைக்கேல் ஸ்டேனிஸ் பிரபு, மாவட்ட இணைச்செயலாளர் செரினா பாக்கியராஜ், எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் ஏசாதுரை ஆகியோர் சிறுபான்மையினர் அடிப்படையில் சீட் கேட்பதற்கான லிஸ்ட்டில் உள்ளனர்.

அதேநேரத்தில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் சிறுபான்மையினர் கோட்டாவில் தொகுதியை பெற்று விடலாம் என்று முயன்று வருகிறார். இப்படி இரு அணிகளும் கடும் நெருக்கடி கொடுப்பதால், அதிமுக தலைமை தூத்துக்குடி தொகுதியை கூட்டணிக்கு தள்ளிவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. பாஜவிற்கு தொகுதியை ஒதுக்கீடு செய்யும் பட்சத்தில் முன்னாள் எம்.பியும், முன்னாள் தூத்துக்குடி மேயருமான சசிகலாபுஷ்பா தொகுதியை பெறுவதற்கு காய் நகர்த்தி வருகிறார். ஆனால் இவர் சமீபத்தில் தான் கட்சியில் சேர்ந்துள்ளதாலும், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர் என்பதாலும் பாஜவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதேபோன்று கட்சியில் சமீபத்தில் சேர்ந்து மாநில சிறுபான்மை பிரிவு செயற்குழு உறுப்பினராக உள்ள ஜே.வி.அசோகனும் சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் தொகுதியை பெற்றுவிட தனக்கு தெரிந்த நபர்கள் மூலம் முயற்சி செய்து வருகிறார். நீண்ட கால பாஜ உறுப்பினர்களாக உள்ள தெற்கு மாவட்ட தலைவர் பால்ராஜ், பொதுச்செயலாளரும் தொடர்ந்து மூன்று முறை மாநகர கவுன்சிலராக வெற்றி பெற்றவருமான வி.எஸ்.ஆர்.பிரபு, மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆகியோரும் வேட்பாளர் ஆகிவிட வேண்டும் என்று முயற்சி எடுத்து வருகின்றனர். திருச்செந்தூர் தொகுதியை பாஜவிற்கு ஒதுக்கினால் அங்கும் சசிகலாபுஷ்பா சீட் கேட்டு வருகிறார். அதனால் பாஜவினர் மாவட்ட பொதுசெயலாளர் சிவமுருகன் ஆதித்தனை வேட்பாளராக நிறுத்துவதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர மாவட்ட செயலாளர் செந்தில்வேல், மாநில வர்த்தக அணி தலைவர் ராஜகண்ணன் உள்ளிட்டோரும் வேட்பாளர் தேர்வுக்கான போட்டியில் உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: