நீட் ஓ.எம்.ஆர் விடைத்தாளில் முறைகேடு சிபிசிஐடி விசாரணை நடத்த சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நீட் தேர்வு ஓ.எம்.ஆர். விடைத்தாளில் நடந்த முறைகேடு குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நீட் இணையதளத்தில் ஓ.எம்.ஆர். விடைத்தாள்களை வெளியிட்டதில் மதிப்பெண் மாற்றப்பட்டது குறித்து கோயம்புத்தூரை சேர்ந்த மனோஜ் என்ற மாணவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. மாணவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒரு தனிப்பட்ட மாணவரால் இணையத்தின் மூலம் நீட் மதிப்பெண்ணை திரிக்க முடியும் என வாதத்திற்காக கூறினால், எண்ணற்ற மாணவர்கள் இதை செய்திருக்க கூடும். என்டிஏ குளறுபடியால் மாணவர் பலிகடா ஆகியுள்ளனர் என்று வாதிட்டார்.

அப்போது, நீதிபதி, இந்த வழக்கில், சைபர் குற்றங்களை கண்டறிவதில் நிபுணத்துவம் பெற்ற சிபிஐ அதிகாரிகள் மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த பிரதிநிதிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு பிரிவை அமைக்கலாமா என்று கேள்வி எழுப்பி இருந்தார்.அதற்கு மத்திய அரசு தரப்பு வக்கீல், அதற்கான அவசியம் ஏதும் இல்லை. ஒவ்வொரு மாநிலமும் தன் பங்குக்கு அவர்கள் பிரதிநிதிகளை நியமிக்க கோருவர். தேசிய தகவல் மையம்  இந்த விவாகரங்களில் கைதேர்ந்தது என்பதால் அவர்கள் இதனை விசாரிக்கட்டும்.

அவர்கள் சுதந்திரமான அமைப்பு என்பதால் இதில் மத்திய அரசின் குறுக்கீடு ஏதும் இருக்காது என்றார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்திருந்த நிலையில், நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, சைபர் கிரைம் நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகளை நியமித்து சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும். யார் மீதும் வழக்கு பதிவு செய்யாமல் ஆரம்பக்கட்ட விசாரணை மட்டும் மேற்கொண்டு மூன்று மாதத்திற்குள் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு  இந்த வழக்கை முடித்து வைத்தார்.

Related Stories:

>