ஜெர்மனி பல்கலைக்கழக தமிழ் ஆய்வு நிறுவனம் மூடுவதை தடுக்க ரூ.1.24 கோடியை தமிழக அரசு தர வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: அதிமுக அரசின் அலட்சியத்தால் ஜெர்மனியில் உள்ள பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு நிறுவனம் மூடும் அபாய நிலையில் இருப்பதால் ரூ.1.24 கோடியை உடனடியாக அனுப்ப மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: செம்மொழித் தமிழ்மொழியினைக் கற்று, அதன்மீது மிகுந்த ஆர்வம் கொண்டு ஜெர்மனியின் தமிழ் அறிஞரான பேராசிரியர் டாக்டர் க்ளவுஸ் லுட்விட் ஜெனரட் என்பவரால் அப்பல்கலைக் கழகத்தில் 1963ல் ஆரம்பிக்கப்பட்டது தமிழ் ஆய்வு நிறுவனம்.

இங்கு, முனைவர் பட்டத்துக்கு 5 படிப்புகள் உள்பட, தமிழில் இளங்கலை படிப்பும் இருக்கிறது. ஆய்வு நிறுவன நூலகத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் நூல்களும், ஓலைச்சுவடிகளும் இருப்பது தனிச்சிறப்பு. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தமிழ் ஆய்வு நிறுவனம் நிதிப் பற்றாக்குறையால் மூடப்படுகிறது என்று முன்பு வெளிவந்த செய்தியை அடுத்து தமிழக அரசின் சார்பில் 1.24 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று 2019ல் கூறப்பட்டு, கொரோனாவால் அந்தத் தொகை வழங்கவில்லை என்று செய்தி வெளிவந்துள்ளது.

‘கொரோனாவில் கொள்ளையடித்த’ அதிமுக அரசின் அலட்சியத்தால், மார்ச் 31ம் தேதியுடன் மீண்டும் அந்த ஆய்வு நிறுவனம் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதிமுக அரசு, இப்போதாவது இந்த 1.24 கோடி ரூபாயை கொலோன் பல்கலைக்கழகத் தமிழ் ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்பிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தமிழ்மொழி மற்றும் தமிழர் பண்பாட்டின் பெருமைக்கு தக்க சின்னமாக உள்ள இந்த ஆய்வு நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டிட ஏதுவாக, கொலோன் பல்கலைக்கழகத்திற்கு உடனடியாக 1.24 கோடி ரூபாய் நிதி சென்றடைவதற்கு மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுத்திட கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: