சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட அமமுகவில் நாளை முதல் விருப்ப மனு வினியோகம்

சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் விருப்ப மனுக்களை வழங்கி வருகின்றன. இந்தநிலையில், அமமுக சார்பில் நாளை முதல் விருப்பமனு வினியோகம் செய்யப்படுகிறது. கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோர் சென்னை ராயப்பேட்டையிலுள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு கட்டணத்தை செலுத்தி விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளலாம். காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையில் விருப்பமனு வினியோகம் நடைபெறும். நாளை தொடங்கும் விருப்பமனு வினியோகமானது வரும் 10ம் தேதியுடன் முடிவடைகிறது. மேலும், தி.நகரில் உள்ள கிருஷ்ணபிரியா இல்லத்தில் தங்கியுள்ள சசிகலா சத்தம் இல்லாமல் தீவிர அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

சசிகலாவை அதிமுகவுடன் கூட்டணியில் இணைக்க பாஜ எடுத்த பலகட்ட முயற்சிகள் தோல்வி அடைந்துள்ளது. இதனால், அமமுக யாராவது கூட்டணிக்கு வருவார்களா என எதிர்பார்த்து காத்திருக்கிறது. இதற்காக அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த கட்சிகளுடன் பேசி வந்தது. கூட்டணி இன்னும் முடிவாகாத நிலையில் நாளை முதல் விருப்பமனு வினியோகம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல், கூடிய விரைவில் கூட்டணி குறித்தும், சசிகலா மேடை பிரச்சாரத்தில் ஈடுபடுவது குறித்தும் அமமுக சார்பில் அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது. சசிகலாவின் முதல்கட்ட மேடைப் பிரசாரம் தஞ்சாவூர், திருவாரூர் அல்லது மதுரை ஆகிய இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் நடைபெறலாம் என கூறப்படுகிறது.

Related Stories:

>