ஆர்.கே.நகரில் அமைச்சர்கள் கொடுத்த ரூ.89 கோடிக்கு எடுத்த நடவடிக்கை என்ன? 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கன்டெய்னர் லாரியில் பிடிபட்ட ரூ.570 கோடி யாருடைய பணம்? தபால் ஓட்டில்தான் தவறுகள் செய்யும் வாய்ப்புகள் அதிகம்; தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் சரமாரி கேள்வி

சென்னை: தபால் ஓட்டில்தான் தவறுகள் செய்யும் வாய்ப்புகள் இருக்கிறது. ஆகவே தபால் ஓட்டு முறையை நீக்க வேண்டும். 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 570 கோடி ரூபாய் கொண்ட ஒரு கன்டெய்னர் லாரி  கைப்பற்றப்பட்டது. அது யாருடைய பணம், எங்கிருந்து வந்தது என்று இன்னும் தெரியவில்லை. ஆர்.கே.நகர் தேர்தலில் ரூ.89 கோடி பணப்பட்டுவாடா செய்யப்பட்டு, கையும் களவுமாக பிடிபட்டது. எந்தெந்த மந்திரி எவ்வளவு கொடுத்தார்கள் என்ற  பட்டியலும் வெளிவந்தது. அதுகுறித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து அரசியல் கட்சிகளுக்கு தெளிவுபடுத்தவும், தேர்தலை அமைதியாக நடத்துவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, நேற்று தமிழகத்தில் உள்ள 10 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டம் சென்னை, தலைமை செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் 10வது மாடியில் உள்ள ஆலோசனை கூட்ட அரங்கில் நடைபெற்றது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமை வகித்தார்.

இதில், திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, இளங்கோவன், அதிமுக சார்பில் பொள்ளாச்சி ஜெயராமன், மனோஜ் பாண்டியன், காங்கிரஸ் சார்பில் தமோதரன், நவாஸ், பாஜ சார்பில் பாலச்சந்திரன், பால்கனகராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆறுமுகநயினார், பீமாராவ், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மூர்த்தி, வீரபாண்டி, தேமுதிக சார்பில் நல்லதம்பி, சந்தோஷ்குமார் உள்ளிட்ட 10 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டம் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது.

கூட்டம் முடிந்த பிறகு அரசியல் கட்சி நிர்வாகிகள் நிருபர்களிடம் கூறியதாவது: ஆர்.எஸ்.பாரதி (திமுக): தமிழகத்தில் ஆளுங்கட்சியினர் பணப்பட்டுவாடாவை ஆரம்பித்துவிட்டனர். ஏற்கனவே கடந்த (2016) சட்டமன்ற தேர்தலில் 570 கோடி ரூபாய் ஒரு கன்டெய்னர் லாரியில் கைப்பற்றப்பட்டது. அது யாருடைய பணம், எங்கிருந்து வந்தது என்று இன்னும் தெரியவில்லை. இன்னொரு தேர்தலே வந்துவிட்டது. அதற்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. இதுகுறித்து வழக்கு தொடர்ந்து, சிபிஐ விசாரணையும் போட்டார்கள்.

ஆனால் எந்த ஒரு முடிவும் இதுவரை வரவில்லை. அதேபோல், ஆர்.கே.நகர் தேர்தலில் ரூ.89 கோடி பணப்பட்டுவாடா செய்யப்பட்டு, கையும் களவுமாக பிடிபட்டது. எந்தெந்த மந்திரி எவ்வளவு கொடுத்தார்கள் என்ற பட்டியலும் வெளிவந்தது. அதுகுறித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே, ஏதோ ஒரு கூட்டத்தை கூட்டி எங்களிடம் கருத்துக்களை கேட்பதை காட்டிலும், ஏற்கனவே நடந்த தவறுகள், இந்த தேர்தலில் நடைபெறாமல் இருக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு முன்தேதியிட்டு பல அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகிறார்கள். அதை தடுத்து நிறுத்த வேண்டும்.

80 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்கு, எல்லா வகையிலும் சந்தேகப்படும்படி உள்ளது. அதில் ஒரு உண்மைத்தன்மை இல்லை. அதில் உள்ள குளறுபடிகள் நீக்க வேண்டும். தபால் ஓட்டை பயன்படுத்திதான் பீகாரில் ஆட்சியையே பிடித்தார்கள். அதேபோல் தமிழகத்தில் உள்ள ராதாபுரத்தில் தபால் வாக்கால் அப்பாவு வெற்றிவாய்ப்பை இழந்தார். அந்த தேர்தல் முடிந்து இன்னொரு தேர்தலே வந்துவிட்டது. இன்னும் அதற்கான முடிவு வரவில்லை. தபால் ஓட்டில்தான் எல்லாவிதமான தவறுகள் செய்யும் வாய்ப்புகள் இருக்கிறது. ஆகவே தபால் ஓட்டு முறையை நீக்க வேண்டும்.  

பொள்ளாச்சி ஜெயராமன் (அதிமுக): 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீடுகளில் இருந்து வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீண்டும் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்காமல் இருக்க என்னென்ன நடைமுறைகள் வைக்கப்பட்டுள்ளது என்று அரசியல் கட்சிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். புதிதாக வேட்புமனுக்களில் மாற்றம் செய்யப்பட்டிருந்தால் அரசியல் கட்சிகளின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும். வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் படிவத்தில் மாற்றம் இருந்தாலும் தெரியப்படுத்த வேண்டும். புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு, தேர்தல் ஆணையம் 2 முகாம் நடத்தி புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என்றும், ஆன்லைன் மூலமாகவும் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

தாமோதரன் (காங்கிரஸ்): பணப்பட்டுவாடாவை தடுப்பது எழுத்தளவில்தான் உள்ளது. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆளுங்கட்சி ஊழல் செய்து நிறைய பணம் வைத்துள்ளார்கள். அதை வைத்து 234 தொகுதியிலும் பணப்பட்டுவாடா செய்வதற்கு தயாராக இருக்கிறார்கள். தபால் ஓட்டுகளை எப்படி முறைப்படுத்தப்போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினோம். அதில் முறைகேடுகள் நடைபெற அதிக வாய்ப்புகள் உள்ளது. பீகாரில் 40க்கும் மேற்பட்ட தொகுதிகளின்  வெற்றிக்கு தபால் ஓட்டுக்கள்தான் ஆளுங்கட்சிக்கும், கூட்டணிக்கும் சாதகமாக இருந்தது. அதே நிலைமை தமிழகத்தில் ஏற்பட்டு விடக்கூடாது.

பாலச்சந்திரன் (பாஜ): வயதானவர்கள் வாக்களிக்க வரிசையில் நிற்கும்போது அவர்களுக்கு தனியாக ஒரு வரிசை அல்லது முன்னுரிமை வழங்க வேண்டும். குற்றவழக்கு உள்ள வேட்பாளர்கள் அந்த வழக்கு சம்பந்தமாக 3 முறை டிவி,  பத்திரிகைகளில் விளம்பரம் தர வேண்டும் என்று விதி இருக்கிறது. அதேபோன்று அவர்கள் சம்பந்தப்பட்ட கட்சியும் குற்ற பின்னணி உள்ள வேட்பாளர்கள் பற்றி விளம்பரம் தர வேண்டும். மூர்த்தி (இந்திய கம்யூ.): தேர்தல் விதிகளுக்கு பிரதமர் உள்ளிட்ட அனைவரும் சமம். பீகாரில் அப்பட்டமாக தேர்தல் விதிகள் மீறப்பட்டது. இதற்கு பிரதமரே தலைமை தாங்கினார். அதேபோல், உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்தபோது எந்தவிதமான தேர்தல் விதிமுறைகளும் பின்பற்றப்படவில்லை.

சந்தோஷ்குமார் (தேமுதிக): தேர்தலில் முக்கிய பிரச்னையாக இருப்பது பொருட்கள் மற்றும் பணம் விநியோகிப்பதுதான். பணப்பட்டுவாடாவை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தொடர்ந்து கூறி வருகிறது. அப்படி பிடிபட்ட பொருட்கள், பிடிபட்ட நபர்கள் மீது தேர்தல் ஆணையம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன. கடந்த தேர்தலில் போடப்பட்ட எப்ஐஆர் நிலை என்ன. யாருக்காவது தண்டனை கொடுக்கப்பட்டுள்ளதா, தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதா என்று தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பினோம்.

பறக்கும் படையினர் சோதனையின்போது, பொதுமக்களுக்கு எந்த வகையிலும் இடைஞ்சல் இல்லாமல் நடத்தப்பட வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு மட்டும் அல்லாமல், அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையத்தின் நடைமுறைகள் தெரிவிக்க வேண்டும். சாரதி (தேசியவாத காங்கிரஸ்): தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால் கவர்னர் ஆட்சியை கொண்டு வந்து தேர்தலை நடத்த வேண்டும். கலைவாணன் (திரிணாமுல் காங்கிரஸ்): தமிழகத்தில் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும். வாக்கு எண்ணிக்கை காலதாமதம் செய்வதை கண்டிக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

* மேலே இருக்கிறவன் பார்த்துக்கொள்வான்

திமுகவை சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது: ஒவ்வொரு தேர்தலிலும் தேர்தல் ஆணையம் இதுபோன்று கூட்டங்களை கூட்டுகிறது. ஆனால், கூட்டங்களில் நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் வருவதில்லை. கேட்டால், மேலிடத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம். அதாவது எல்லாத்தையும் மேலே இருக்கிறவன் பார்த்துக்கொள்வான் என்கிற நிலைதான் உள்ளது என்றார்.

Related Stories:

>