60 வயதுக்கு மேற்பட்டவரா நீங்கள்... அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடுவதை பயன்படுத்த வேண்டும்: தனியாரிடம் ரூ.250 கட்டணம்; சென்னையில் துணை குடியரசு தலைவர் செலுத்தி கொண்டார்

சென்னை: 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. சென்னையில் துணை குடியரசு தலைவர் மற்றும் ஆளுநர் ஆகியோர் செலுத்தி கொண்டார். தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயது முதல் 59 வயது மற்றும் கூட்டு நோய் உள்ளவர்களுக்கு மார்ச் 1ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயது மற்றும் இணை நோய் உள்ளவர்கள் நேரடியாக மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

மருத்துவமனைக்கு செல்லும் போது, வயது சான்றுக்காக ஆதார் அட்டை, ஓய்வூதிய அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் அட்டை என ஏதாவது ஒன்றை கொண்டு வந்தால், கோவின் செயலியில் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது. 45 வயது முதல் 59 வயது வரையிலான கூட்டு நோய்களுடன் இருப்பவர்கள் ஒரு மருத்துவரிடம் இருந்து தனக்கு என்ன கூட்டு நோய் உள்ளது என குறிப்பிட்டு ஒரு கடிதம் பெற்று வந்தால் மட்டும் தடுப்பூசி அளிக்கப்படடது.

இதன்படி தமிழகத்தில் நேற்று காலை முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. 761 தனியார் மருத்துவமனைகளிலும், 529 அரசு மருத்துவமனைகளிலும் தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி பதிவு செய்தவர்களுக்கும், நேரடியாக மையங்களுக்கு வந்தவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

இதன்படி சென்னையில் ராஜீவ்காந்தி, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. ஓமந்தூரார் மருத்துவமனையில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவும், ஆளுநர் பன்வாரிவால் புரோகித் ஆகியோர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் பெற்றும் தடுப்பூசி வழங்கப்பட்டது. தனியார் மருத்துவமனைகளில் ரூ.250க்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் ரூ.150 தடுப்பு மருந்தின் விலையாகும். ரூ.100 சேவை கட்டணமாகும். முதியவர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் கோவின் செயலி (cowin2.0 app) மூலம் செய்து கொள்ளலாம். செல்போன் எண், வயது சான்றிதழ் ஆகியவை பதிவேற்றம் செய்து, எந்த மையத்தில் தடுப்பூசி போட்டு கொள்ள விருப்பம் என்பது தேர்வு செய்ய வேண்டும். இதன்பிறகு தடுப்பூசி போடும் தேதி குறுஞ்செய்தியாக செல்போன் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: