சிதம்பரம் பல்கலை வளாகத்தில் மாணவிக்கு சரமாரி கத்திக்குத்து: ஒருதலை காதலால் பள்ளி ஆசிரியர் வெறிச்செயல்

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண் கல்லூரியில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது மாணவி தோட்டக்கலை முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ரோஸ் ஹாஸ்டல் என்ற விடுதியில் தங்கியுள்ளார். நேற்று மாலை மாணவி ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக விடுதிக்கு வெளியே வந்துள்ளார். விடுதிக்கு அருகே உள்ள மருத்துவ குடியிருப்பு எதிரில் வந்த போது திடீரென இளைஞர் ஒருவர் மாணவியை ஆபாசமாக திட்டி, என்னை காதலிக்க மாட்டாயா எனக் கேட்டு பேனா கத்தியால் கழுத்து மற்றும் கையில் கிழித்து உள்ளார். பின்னர் அதே பேனா கத்தியால் தன்னையும் கிழித்துக் கொண்டுள்ளார். இதை பார்த்த அங்கிருந்த சிலர் ஓடிச் சென்று மாணவியை அந்த இளைஞரிடம் இருந்து மீட்டனர்.

பின்னர் இருவரையும் சிகிச்சைக்காக பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்து போலீசார் சென்று இருவரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில், திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள பள்ளூர்வடை கிராமத்தை சேர்ந்த பிரான்சிஸ் சேவியர் (30) என்பதும், இவர் தனியார் பள்ளி ஒன்றில் சில காலம் ஆசிரியராக பணியாற்றிய விபரமும் தெரியவந்தது. மாணவி பள்ளியில் படித்த போது சுமார் ஒரு வருடமாக ஒருதலையாக காதலித்ததும் தெரிய வந்துள்ளது. அந்த பழக்கத்தில்தான் நேற்று பல்கலைக்கழகத்துக்கு சென்று தன்னை காதலிக்க மாட்டாயா என கேட்டு கத்தியால் குத்தியதும் தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து அண்ணாமலைநகர் போலீசார், பிரான்சிஸ் சேவியர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>