தாராபுரம் அருகே வாக்காளர்களுக்கு வழங்க தனியார் கல்லூரியில் அ.தி.மு.க.வினர் பதுக்கிய பரிசு பொருட்கள் பறிமுதல்

தாராபுரம்: திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதி உள்ளது. இத்தொகுதி வாக்காளர்களுக்கு வழங்க தாராபுரத்தில் இருந்து ஒட்டன்சத்திரம் பழனி செல்லும் புறவழிச் சாலை சந்திப்பு அருகே அ.தி.மு.க. பிரமுகருக்கு சொந்தமான கல்லூரியின் வகுப்பறைக்குள் வேட்டி, சேலை, சில்வர் தட்டு உள்ளிட்ட பரிசுப் பொருட்களை அ.தி.மு.க.வினர் பதுக்கினர். இவற்றை ஆட்டோ மூலம் எடுத்துச் சென்று கிராம பகுதிகளில் கடந்த 2 நாளாக விநியோகித்தனர். இத்தகவலறிந்த தி.மு.க.வினர் ஆட்டோவில் ஏற்றி சென்ற பரிசு பொருட்களை கல்லூரி வாசலிலேயே நேற்று மதியம் 2 மணியளவில் மடக்கிப் பிடித்தனர்.

பின்னர், தேர்தல் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்துவிட்டு கல்லூரியின் 4 நுழைவாயில் முன்பு காவல் காத்தனர். ஆனால் மாலை 6 மணியாகியும் அதிகாரிகள் வராததால் மறியலில் ஈடுபட தயாராகினர். தகவலறிந்து வந்த தாராபுரம் போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து கல்லூரிக்குள் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு ஆட்டோவில் இருந்த வேட்டி, சேலை சில்வர் தட்டுகளை பறிமுதல் செய்தனர். ஆனாலும் தாராபுரம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் செந்தில் குமார் தலைமையில் தி.மு.க.வினர் பரிசுப் பொருட்கள் இருந்த அறையின் முன் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

இதையறிந்த 150க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் கல்லூரியின் கதவை தி.மு.க.வினர் உடைப்பதாக பொய் புகார் கூறி கல்லூரிக்குள் நுழைந்து தி.மு.க.வினரை தாக்கும் வகையில் வந்தனர். இதனால் மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி அ.தி.மு.க.வினரை கல்லூரி வளாகத்தை விட்டு வெளியேற்றினர். இதையடுத்து சம்பவயிடத்துக்கு வந்த தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரகவிதா கல்லூரியில் பதுக்கி வைத்திருந்த 4800 வேட்டி, 1800 சேலை, 1950 சில்வர் தட்டுகளை பறிமுதல் செய்து சென்றார். தாராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: