புதுச்சேரியில் ஆட்சியை கலைக்க பெங்களூரிலிருந்து மூட்டை மூட்டையாக பணம் கொண்டு வந்த பாஜவினர்: நாராயணசாமி பகிரங்க குற்றச்சாட்டு

சென்னை: புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, அரசின் அன்றாட நிர்வாகத்தில் தலையிடுவதும், கோப்புகளை கிழித்து எறிவதுமாக இருந்து வந்தார். இதனால் தான் மாநில வளர்ச்சி திட்டங்கள் தடுக்கப்பட்டது. இதை கண்டித்து அவர் அலுவலகம் முன்பு, 6 நாட்கள் போராட்டம் நடத்தினோம். எங்கள் அரசுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், மத்திய அரசுடன் இணைந்து கிரண் பேடி செயல்பட்டார். கிரண் பேடியை நீக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம், தெருமுனை பிரச்சாரம் போன்றவற்றை செய்தோம். அதனையடுத்து, கிரண் பேடியை மத்திய அரசு பதவியிலிருந்து நீக்கியது. பின்னர், தமிழிசை சவுந்தரராஜன் துணை நிலை ஆளுநராக பதவியேற்றவுடன் ஆட்சி கவிழ்ப்பு வேலை வேகமாக நடந்தது.

சென்னையில் உள்ள பாஜ நிர்வாகிகள் புதுச்சேரியில் முகாமிட்டனர். பெங்களூருவில் இருந்து பாஜ நிர்வாகிகள் பண மூட்டைகளை கொண்டு வந்தனர். நமச்சிவாயம், பாஜவுடன் ஓராண்டு காலம் தொடர்பில் இருந்து வந்தார். ஜான்குமார் எம்.எல்.ஏ மீதுள்ள வருமான வரி வழக்கை ரத்து செய்வதாக கூறி, அவரை ராஜினாமா செய்ய வைத்தனர். பல கோடி ரூபாயை கொண்டு, அமித்ஷா தலைமையில் புதுச்சேரியில் ஆட்சியை கலைத்தனர். சபாநாயகரை அமித்ஷா நேரடியாக மிரட்டியுள்ளார். அதனால், மூன்று நியமன எம்எல்ஏக்களுக்கு வாக்களிக்க அதிகாரம் அளித்தார். இதேபோல், பலரை மிரட்டியுள்ளனர். புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக கூட்டு சதி செய்தனர்.

அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், கோவா, கர்நாடகா, மத்தியப்பிரதேசம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பல ஆயிரம் கோடியை பாஜ செலவு செய்துள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அரசு வழங்கிய 15,000 கோடி பணத்தை நான் எடுத்துசென்று, காந்தி குடும்பத்துக்கு கொடுத்ததாக பொய் குற்றச்சாட்டை வைக்கிறார். என் மீது அவர் சொன்ன குற்றச்சாட்டை நிரூபிக்க தயாரா? என்று நான் சவால் விடுகிறேன். அமித்ஷா மீது அவதூறு வழக்கு தொடுக்க உள்ளேன். என் மீது உள்ள குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லை என்றால், அமித்ஷா மக்கள் மத்தியில் மன்னிப்பு கேட்க வேண்டும். வரும் சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சி அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: