பிரதமர் முன் முதல்வர் குனிந்து நிற்கிறார் எவர் முன்னும் தலை வணங்காதவர்தான் தமிழக முதல்வராக வர வேண்டும்: கன்னியாகுமரி பிரசாரத்தில் ராகுல்காந்தி விருப்பம்

நாகர்கோவில்: ‘’முதல்வர், பிரதமர் முன் தலை குனிந்து நிற்கிறார். எனவே, மக்களின் முன்பு தவிர வேறு எந்த நபர் முன்னும் தலை வணங்காதவர்தான் தமிழகத்திற்கு முதல்வராக வேண்டும்’’ என்று ராகுல்காந்தி பொதுமக்கள் மத்தியில் தனது விருப்பத்தை தெரிவித்தார். அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக நேற்று காலை குமரி மாவட்டம் வந்தார். தென்காசியில் இருந்து ஹெலிகாப்டரில் காலை 9.55 மணிக்கு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வந்தார். வரவேற்பு நிகழ்ச்சிக்கு பின், கன்னியாகுமரியில் சர்ச் ரோடு, தக்கலை, கருங்கல், குளச்சல், குழித்துறை, களியக்காவிளை பகுதிகளில் திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் ராகுல்காந்தி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது: டெல்லியில் உள்ள மோடி அரசு தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம், தமிழ் நாகரீகத்துக்கு மதிப்பளிப்பது இல்லை. இங்குள்ள முதல்வர் ஒவ்வொன்றையும் இழந்து நிற்கிறார். தமிழக முதல்வர், தமிழக மக்கள் சொல்வதை செய்யாமல், மோடி சொல்வதை செய்பவராக இருக்கிறார். தமிழ்நாட்டை ஒரு தொலைக்காட்சி போன்று, பிரதமர் மோடி  கையாண்டு வருகிறார். அவர் ரிமோட் கண்ட்ரோலை எடுத்து சேனல்களை மாற்றுவது போல் இங்கு  மாற்றங்களை செய்கிறார். அந்த ரிமோட் கண்ட்ரோலின் பேட்டரி  பிடுங்கி எறியப்பட வேண்டும்.

தமிழக முதல்வர் ஊழல் செய்பவராக இருக்கிறார். அதனால்தான், அவரை மோடி ஏற்றுக்கொண்டார். சிபிஐ, அமலாக்க பிரிவை காண்பித்து முதல்வரை, மோடி மிரட்டுகிறார். தமிழர்கள் வரலாறு என்பது தமிழர்கள் அல்லாதவர்களை  அனுமதிக்க மாட்டார்கள் என்பதுதான். இந்த  தேர்தலிலும் இதை நாம் பின்பற்ற வேண்டும். யார் தமிழை, தமிழ் மக்களை முன்னிலைப்படுத்துகிறார்களோ, அவர்கள்தான் தமிழ்நாடு முதல்வராக வேண்டும். தமிழகம் இந்தியாவுக்கே வழிகாட்டும் மாநிலம் ஆகும். காமராஜர் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்த நேரத்தில் பொருளாதார மேதைகள் பலர், இந்த திட்டம் பொருளாதாரத்தை பாதிக்கும் என்றார்கள். ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து  செயல்படுத்தினார். காமராஜர் செயல்படுத்திய திட்டத்தை இந்தியா முழுவதும் பின்பற்றுகிறோம். எனவேதான் தமிழ்நாடு, இந்தியாவின் வழிகாட்டி என்று கூறுகிறோம்.

தமிழகம் தொழில் துறையில் முதன்மை மாநிலமாக உள்ளது. பல ஆயிரம் சிறு, குறு தொழில்கள் இங்கு உள்ளன. அவற்றின் மூலம் வேலை வாய்ப்புகளை வழங்குகிறார்கள். ஆனால் இந்த வளர்ச்சியை மேம்படுத்திட ஆட்சியாளர்கள் முயற்சி செய்யவில்லை. முதல்வர், பிரதமர் முன் தலை குனிந்து நிற்கிறார். அவர் தமிழக மக்கள் முன்தான் தலை குனிந்து  நிற்க வேண்டும். மோடிக்கு தலை குனிந்து நிற்க வேண்டியதில்லை. தமிழ்மொழியை ஆர்.எஸ்.எஸ்.சுடன், சேர்ந்து மோடி ஒழிக்க பார்க்கிறார். நான் தமிழ் மொழி, கலாச்சாரம், பண்பாட்டை காப்பாற்ற இருக்கிறேன். இது என்னுடைய கடமை ஆகும். தமிழ் மொழி மட்டுமல்ல, பிற மொழிகளையும் காப்பாற்றுவேன். துணை நிற்பேன்.

பெருந்தலைவர் காமராஜர் போல் ஒருவர் நமக்குத் தேவைப்படுகிறார். கடந்த காலத்தில் நடந்த தவறுகள் எல்லாம் எதிர்காலத்தில் எதிரொலிக்க கூடாது. உங்களது முதல்வராக வரக்கூடியவர் அழுத்தத்தைக் கண்டு அஞ்சக்கூடாது. சுதந்திரமாக செயல்பட கூடிய நபர் முதல்வராக வரவேண்டும். அவர் தமிழக மக்களின் முன்புதான் தலை வணங்க வேண்டுமே தவிர வேறு எந்த நபர் முன்னும் தலை வணங்க கூடியவராக இருக்கக் கூடாது. அப்படிப்பட்ட முதல்வர்தான் தமிழகத்திற்கு தேவை. இவ்வாறு ராகுல்காந்தி பேசினார். வசந்தகுமார் மணிமண்டபம் அடிக்கல் : ராகுல்காந்தி எம்.பி. கன்னியாகுமரி அடுத்த  அகஸ்தீஸ்வரம்  பூஜப்புரவிளையில் உள்ள மறைந்த முன்னாள் எம்.பி. வசந்தகுமாரின் நினைவிடத்துக்கு சென்று  அஞ்சலி செலுத்தினார். பின்னர் வசந்தகுமார் நினைவிடத்தில், மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டினார்.

* ஒற்றை கையில் தண்டால் எடுத்து அசத்திய ராகுல்

முளகுமூடு புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கலந்துரையாடலின்போது மாணவ, மாணவிகளின் வேண்டுகோளுக்கிணங்க அவர்களுடன் இணைந்து மேடையில் நடனம் ஆடினார். அப்போது ஜூடோ போட்டியில் பரிசு பெற்ற மாணவனை பாராட்டிய ராகுல், தண்டால் எடுப்பதில் சாதனை படைத்த மாணவி கேட்டுக்கொண்டதற்கிணங்க மேடையில் ஒரு நிமிடம் ராகுல்காந்தி தண்டால் (புஷ்அப்) எடுத்தார். ஒரு கையாலும் தண்டால் எடுத்து அசத்தினார். ராகுல் காந்தியின் இந்த வேகமான பயிற்சி, மாணவ, மாணவிகளை வியக்க வைத்தது.

* குத்துச்சண்டை வீரரின் உடற்கட்டு

சமீபத்தில் கேரளா சென்றிருந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மீனவர்களுடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார். அப்போது, அவர் கடலில் அவர்களுடன் மூழ்கி, பின்னர் வலை இழுக்கவும் உதவினார். அப்போது எடுத்த போட்டோ ஒன்றில், நனைந்த டி-சர்ட்டில் ராகுல் நிற்கும் போட்டோவில் அவரது ஆப்ஸ்கள் (உடற்கட்டு) தெளிவாக தெரிந்தன. இந்த போட்டோவை தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ள குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், ``ஒரு குத்துச்சண்டை வீரரின் ஆப்ஸ் போன்று உள்ளது. மிகவும் அசத்தலான உடல்வாகு கொண்ட இளைஞர் மற்றும் மக்கள் தலைவர்,” என்று பாராட்டியுள்ளார்.

Related Stories: