மேற்குவங்கம், பீகார், கர்நாடகா, தெலங்கானா, புதுச்சேரி போன்று தமிழகத்தில் அதிமுகவை கைப்பற்ற பாஜ ரகசிய திட்டம்: எடப்பாடி, ஓபிஎஸ் உள்ளிட்ட தலைவர்கள் வலையில் சிக்குவார்களா?

சென்னை: மேற்குவங்கம், பீகார், கர்நாடகா, தெலங்கானா, புதுச்சேரி போன்று தமிழகத்தில் அதிமுகவை கைப்பற்றி பாஜ தன்னை நிலைநிறுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளது. அக்கட்சியின் வலையில் எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் வலையில் சிக்குவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 1967ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. இதன்பிறகு 1967ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி திமுக ஆட்சியை பிடித்தது. அண்ணா முதல்வரானார். அண்ணா மறைவுக்கு பிறகு கலைஞர் முதல்வரானார். இதைத்தொடர்ந்து எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா, ஜானகி எம்ஜிஆர், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அடுத்தடுத்து கடந்த 54 ஆண்டுகளாக தமிழகத்தில் திமுக அல்லது அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது.

தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜ உள்ளிட்ட எந்த கட்சியும் தமிழகத்தில் கடந்த 54 ஆண்டுகளாக ஆட்சியை பிடிக்க முடியவில்லை. தேசிய கட்சிகள் திமுக அல்லது அதிமுகவின் தோளில் ஏறி தொடர்ந்து 54 ஆண்டுகளாக சவாரி செய்து வருகிறது. தமிழக மக்களும், தேசிய கட்சிகளை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்கள். இதனால், தேசிய கட்சிகள் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் தமிழகத்தில் இனி ஆட்சிக்கு வர முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு கூட தமிழகத்தில் கொஞ்சம் மரியாதை உள்ளது. ஆனால் பாஜ கட்சிக்கு, சுத்தமாக தமிழகத்தில் வாக்கு வங்கி இல்லை. அந்தளவுக்கு அந்த கட்சி போட்டியிடும் இடங்களில், நோட்டோவைவிட குறைவான ஓட்டுக்களை வாங்கி பொதுமக்களின் கிண்டலுக்கும், கேலிக்கும் ஆளாகி வருகிறது.

இந்த நிலையில்தான் டெல்லி பாஜ தலைவர்கள் தமிழகத்தில் தங்கள் கட்சியை வளர்க்க புதிய வியூகத்தை கையில் எடுத்துள்ளனர். அதன்படி, கடந்த 4 ஆண்டுகளாக அதிமுகவை தங்களின் கைப்பாவையாக வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை டெல்லி பாஜ தலைவர்கள் தமிழகத்திற்கு வந்து ஜெயலலிதாவை சந்தித்துவிட்டு செல்வது வழக்கமாக இருந்தது. ஏன், பிரதமர் மோடி கூட சென்னை வந்தபோது ஜெயலலிதாவை அவரது இல்லத்துக்கு சென்று சந்தித்தார். ப்யூஸ் கோயல் உள்ளிட்ட பல தலைவர்கள் அவரை சந்திக்க பல மணி நேரம் காத்திருந்து, வெறுங்கையுடன் திரும்பிச் சென்ற சம்பவமும் நடந்தது. தேர்தல் பிரசாரத்தில் கூட ஜெயலலிதா, மோடியா இந்த லேடியா என்று சவால் விடும் வகையில் பிரசாரம் செய்தார். இது அதிமுகவினரிடம் மட்டுமல்ல தமிழக மக்களிடமே பாராட்டை பெற்றது.

ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எல்லாம் தலைகீழாக மாறி விட்டது. ஜெயலலிதா எதிர்த்த உதய் மின் திட்டம் மற்றும் நீட் தேர்வு கட்டாயம் உள்ளிட்ட பல திட்டங்களை எடப்பாடி தலைமையிலான அரசு செயல்படுத்தியது. தமிழகத்தில் ரயில்வே, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் வெளிமாநிலத்தவர்கள் பணியில் அமர்த்துவது என தலைகீழ் மாற்றம் ஏற்பட்டது. இதனால் தமிழகத்தில் படித்த இளைஞர்களுக்கு தமிழகத்தில் கூட வேலை கிடைக்காத நிலை தற்போது உள்ளது. இதற்கெல்லாம் காரணம் தற்போது ஆட்சியாளர்கள்தான்.

ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு முதல்வர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் தங்கள் துறைகளில் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருந்தார்கள். 2017ம் ஆண்டு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, வருமான வரித்துறையினர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அதிரடி ரெய்டு நடத்தினர். அப்போது, ஆர்.கே.நகர் தொகுதியில் ஒவ்வொரு அமைச்சர்களும் எவ்வளவு பணம் செலவு செய்தார்கள் என்று ஒரு பட்டியலே கிடைத்தது. அதில் ரூ.89 கோடி வரை சிக்கியது.

தலைமை செயலகத்தில் உள்ள தலைமை செயலாளர் அறையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பல காண்டிராக்டர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனைகளின் பின்னணியில் அமைச்சர்கள் பலர் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இப்படி மத்திய அரசின் கீழ் செயல்படும் வருமான வரி துறை அதிகாரிகள் அனைத்து அமைச்சர்களின் ஊழல் பட்டியலையும் வெளியில் கொண்டு வந்தது. ஆனால் இந்த ஊழலில் ஈடுபட்ட தமிழக அமைச்சர்கள் மீது மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதை வைத்து பயம் காட்டியே, மத்திய அரசு கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் தங்களது அனைத்து திட்டங்களையும் கச்சிதமாக நிறைவேற்றி வருகிறது. பெயருக்கு தான் தமிழகத்தல் அதிமுக ஆட்சி நடைபெறுகிறது என்று சொல்லப்படுகிறது. ஆனால், உண்மையில் தமிழகத்தில் ஆட்சி செய்வது மத்தியில் உள்ள பாஜகதான் என்று பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் கூட வெளிப்படையாக சொல்லும் அளவுக்கு தற்போது நிலைமை உள்ளது. மத்திய அரசின் இதுபோன்ற செயல்பாடுகளை தட்டிக்கேட்க முதல்வர் உள்ளிட்ட எந்த அமைச்சருக்கும் தைரியம் இல்லாத நிலை உள்ளது.

தமிழக அமைச்சர்கள் பலரும் வாரம் வாரம் டெல்லி சென்று பாஜ தலைவர்களை சந்தித்து சரண்டர் ஆகும் நிலை தற்போது அரங்கேறி வருகிறது. பாஜகவும் முதல்வர் எடப்பாடியை கைப்பாவையாக வைத்துக் கொண்டு அதிமுக ஆட்சியையும், கட்சியையும் பாஜவின் கரங்களில் மாற்ற முயற்சி செய்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக அதிமுக தலைவர்களை பாஜவுக்கு இழுக்கும் முயற்சியில் கடந்த சில மாதங்களாக பாஜ ஈடுபட்டு வருகிறது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாஜகவுடன் நெருங்கி பழகி வந்தார். ஆனால் பாஜகவுக்கு நேரடியாக செல்ல அவர் தயக்கம் காட்டினார். பெரிய பதவியில் உள்ள அதிமுக தலைவர்கள் யாரும் பாஜகவுக்கு செல்லவில்லை.

அதேநேரம், அதிமுக கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட அல்லது பதவியில் இல்லாத செல்லாக்காசான சிலர் மட்டுமே பாஜகவில் இணைந்தனர். இதனால் தங்கள் திட்டத்தை தமிழகத்தில் அரங்கேற்ற முடியாமல் பாஜ தலைவர்கள் தடுமாறினர்.

இந்த நிலையில்தான் சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தார். அவர் மூலம் தங்கள் திட்டத்தை செயல்படுத்த பாஜ தற்போது முயற்சி செய்து வருகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு 60 இடங்கள் தர வேண்டும். அதில் 20 இடங்களை சசிகலாவுக்கு கொடுத்து, அவர் விரும்பும் வேட்பாளர்களை நிறுத்துவோம் என்று அதிமுகவிடம் கூட்டணி பேரம் பேசப்பட்டது.

இதில் அமித்ஷாவே நேரடியாக இறங்கி வந்து முதல்வர் எடப்பாடியிடம் இதுபற்றி பேசினார். ஆனால் இந்த திட்டத்தை முதல்வர் எடப்பாடி ஏற்க மறுத்து விட்டார். இந்த திட்டம் வெற்றிபெற்றால், சசிகலா தரப்பில் வெற்றிபெற்ற எம்எல்ஏக்களை தேர்தலுக்கு பிறகு தங்கள் பக்கம் இழுத்துக்கொள்ள திட்டமிட்டது. ஆனால் அந்த திட்டம் தோல்வியில் முடிந்து விட்டது. ஆனாலும், அமமுகவினரை தாமரை சின்னத்தில் போட்டியிட வைத்து, தேர்தலுக்கு பிறகு அதிமுகவை உடைக்க பாஜ தற்போது திட்டம் தீட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 காரணம், கட்சிகளை உடைப்பது ஒன்றும் பாஜகவுக்கு புதிதல்ல. புதுச்சேரியில் பாஜகவுக்கு ஒரு எம்எல்ஏ கூட இல்லை. பின்னர் 3 பேரை பாஜக எம்எல்ஏக்களாக நியமனம் செய்தது. பின், காங்கிரஸ் எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுத்து ஆட்சியையே கவிழ்த்து விட்டனர். இதேபோன்று மேற்கு வங்கத்தில், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மம்தா பானர்ஜி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி செய்து வருகிறார். ஆனாலும், பாரதிய ஜனதாவால் அங்கு ஆட்சி அமைக்க முடியாமல் 4வது சிறிய கட்சியாகவே இருந்தது. ஆனால் தற்போது அமைச்சர்கள், எம்பி, ஏம்எல்ஏக்களை பாஜ பக்கம் இழுத்து அங்கு 2வது கட்சியாக பாஜ வளர்ந்துள்ளது.

பீகாரில், லல்லுபிரசாத் மற்றும் நிதிஷ்குமார், காங்கிரஸ் கட்சியே பெரிய கட்சியாக இருந்தது. தற்போது லல்லு, காங்கிரஸ் கட்சியை பின்னுக்கு தள்ளிவிட்டு நிதிஷ்குமாருடன் கூட்டணி அமைத்து பாஜ போட்டியிட்டு 2வது இடத்துக்கு வந்து விட்டது. நிதிஷ்குமார் 3வது இடத்துக்கு சென்று விட்டார். இதனால் நிதிஷ்குமாரும் தற்போது பாஜ சொல்வதெற்கெல்லாம் தலையாட்டும் நிலையில் உள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ், தேவகவுடா (ஜனதாதளம்) ஆகிய கட்சிதான் பெரிய கட்சியாக இருந்தது. இந்த கட்சிகளே மாறி மாறி தேர்தலில் வெற்றியும் பெற்றது.

இப்போது, இந்த இரண்டு பெரிய கட்சிகளையும் பின்னுக்கு தள்ளி பாஜ முதலிடத்திற்கு வந்து விட்டது. இதற்கு காங்கிரஸ், ஜனதாதளம் எம்எல்ஏக்கள் பாஜகவிடம் விலைபோனதே காரணம். தெலங்கானாவிலும் முதல்வராக உள்ள சந்திரசேகர் ராவ் கட்சியில் உள்ள எம்பி, எம்எல்ஏக்களையும், தெலுங்குதேச கட்சியின் எம்பிஎம்எல்ஏக்களை இழுத்து பாஜ முன்னிலை பெற்று வருகிறது. தெலுங்குதேசம் கட்சி நிர்வாகிகளை மொத்தமாக பாஜகவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டது. இப்படி பல மாநிலங்களில் வெற்றியே பெற முடியாது என்ற நிலையில் இருந்த பாஜ, குறுக்கு வழியில் எம்பி, எம்எல்ஏக்கள், அமைச்சர்களின் ஊழல் பட்டியலை கையில் எடுத்து, அதை தனக்கு சாதகமாக்கி அந்த மாநிலங்களில் பாஜ வளர்ச்சி பெற்றதுடன், ஆட்சி அமைக்கும் நிலைக்கு முன்னேறி வருகிறது. இதற்கு அந்த மாநிலங்களில் தலைவர்கள் கொள்கையை விட்டுவிட்டு, விலைபோனதே காரணம் ஆகும்.

இதே நிலையைதான் தற்போது தமிழகத்தில் பாஜ தலைவர்கள் கையில் எடுத்துள்ளனர். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி தோல்வி அடையும் என்று கருத்துக்கணிப்புகள் கூறினாலும் அந்த கட்சியுடன் பாஜ கூட்டணி அமைத்து போட்டியிட முயற்சி செய்து வருகிறது. பாஜவை பொறுத்தவரை, வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் முக்கியம் அல்ல. 2024ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலையே குறிவைத்து தமிழகத்தில் பாஜ செயல்பட்டு வருகிறது. இதற்கு அதிமுக தலைவர்களை பாஜ தனது கைப்பாவையாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த தேர்தலில் பாஜ குறைந்த அளவு எம்எல்ஏக்களை பெற்று தமிழகத்தில் எப்படியாவது காலூன்றி விட வேண்டும்.

பின்னர் அதிமுக எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக பாஜ பக்கம் இழுக்க வேண்டும். இதன்மூலம் தமிழகத்தில் கடந்த 48 ஆண்டுகளாக பெரிய கட்சி என்று கூறி வரும் அதிமுக என்ற ஒரு கட்சியே இல்லாத நிலையை ஏற்படுத்தி, 2வது பெரிய கட்சியாக தமிழகத்தில் பாஜ வர வேண்டும் என்பதே மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜ தலைவர்களின் திட்டம். பின்னர் தமிழகத்தில் திமுகவுக்கு போட்டியாக பாஜக மட்டுமே இருக்க வேண்டும் என்றும் அவர்கள் நினைக்கின்றனர். இந்த திட்டத்திற்கு அதிமுகவில் உள்ள பெரிய தலைவர்கள் விலை போவார்களா அல்லது எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் காலம் காலமாக கட்டிக்காத்து வந்த கட்சியை, பாஜ விரிக்கும் மாயவலையில் இருந்து காப்பாற்றி, தப்பி வெளியே வருவார்களா என்பது போகப்போகத்தான் தெரியும்.

அதேநேரம், ஒரு சில ஊழல் அமைச்சர்களுக்காக பாஜவிடம் அதிமுகவை அடகுவைத்துவிடக் கூடாது, சுயமரியாதை விட்டுவிடக் கூடாது என்று அதிமுக தொண்டர்கள் ஓங்கி குரல் எழுப்பி வருகிறார்கள். ஆனால், இந்த அப்பாவி தொண்டர்களின் குரல் அதிமுக கட்சி தலைவர்களின் காதில் எட்டுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பல மாநிலங்களில் வெற்றியே பெற முடியாது என்ற நிலையில் இருந்த பாஜ, குறுக்கு வழியில் எம்பி, எம்எல்ஏக்கள், அமைச்சர்களின் ஊழல் பட்டியலை கையில் எடுத்து, அதை தனக்கு சாதகமாக்கி அந்த மாநிலங்களில் பாஜ வளர்ச்சி பெற்றதுடன், ஆட்சி அமைக்கும் நிலைக்கு முன்னேறி வருகிறது.

Related Stories: