‘‘பாமகவால் எங்களைபோல கூட்டம் நடத்தமுடியுமா?’’ உரிய மரியாதை தராவிட்டால் அதிமுகவை தோற்கடிப்போம்: தேமுதிக நிர்வாகி பேச்சால் மதுரை அதிமுகவினர் ‘‘ஷாக்’’

திருமங்கலம்:  ‘‘உரிய மரியாதையை எங்களுக்கு அதிமுக கொடுக்கவில்லை என்றால், வரும் தேர்தலில் அக்கட்சியை தேமுதிக தோற்கடிக்கும்’’ என்று திருமங்கலத்தில் நடந்த தேமுதிக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் நிர்வாகி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை தெற்குமாவட்ட தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருமங்கலத்தில் நேற்று நடந்தது. கட்சியின் மாநில துணை செயலாளர் அப்கர் சிறப்புரையாற்றினார். அதிமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை நடைபெற்றுவரும் நிலையில், நிர்வாகிகள் பலரும் அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்தனர்.

தேர்தல் பணிக்குழு செயலாளர் மாதவன் பேசும்போது, ‘‘‘‘திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு அடுத்தபடியாக அங்கீகாரம் பெற்ற கட்சியாக திகழ்வது தேமுதிகதான். 2011ல் அதிமுக தமிழகத்தில் ஆட்சியமைக்க தேமுதிகதான் காரணம். எங்களுக்கு உரிய மரியாதையை அதிமுக கொடுக்கவில்லை என்றால், வரும் சட்டசபை தேர்தலில் அக்கட்சியை தோற்கடிப்பதில் தேமுதிக முக்கிய பங்கு வகிக்கும். 2011ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் கூட்டணி அமைத்தோம். ஜெயலலிதா நம்மை கேட்காமல் அதிமுக வேட்பாளர்களை அறிவித்தார்.

உடனே விஜயகாந்த், அதிமுக வேட்பாளர்களை 24 மணிநேரத்தில் வாபஸ் பெறாவிட்டால் தேமுதிக தனித்து 234 இடங்களிலும் போட்டியிடும் என அறிவித்தார். உடனடியாக கூட்டணிக் கட்சிக்காக ஜெயலலிதா, தான் அறிவித்த வேட்பாளர்களை வாபஸ் பெற்றார். தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பாமகவிற்கு 23 சீட்டுகள் கொடுத்துள்ளார். ராமதாசால் திருமங்கலத்தில் இப்படி ஒரு கூட்டத்தை கூட்டமுடியுமா? பென்னாகரம் இடைத்தேர்தலில் அதிமுக டெபாசிட் இழக்க நாங்கள்தான் காரணம்’’ என்றார். அதிமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள தேமுதிக, தற்போது கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் திருமங்கலத்தில் நடந்த மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தேமுதிக மேலிட பார்வையாளர்களை வைத்து கொண்டே, அதிமுகவை விமர்சனம் செய்த தகவல் அறிந்த அதிமுகவினர் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர்.

Related Stories: