சமையல் காஸ் சிலிண்டர் விலை மீண்டும் ரூ.25 உயர்வு

சேலம்: நாடு முழுவதும் வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர் விலை நடப்பு மாதத்திற்கு ரூ.25 அதிகரித்து எண்ணெய் நிறுவனங்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஓராண்டுக்கு பின் மீண்டும் உச்சத்தை தொட்டுள்ள நிலையில, மானியம் வழங்காததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு மாற்றி வருகிறது.

இதில், பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றுகின்றனர். காஸ் சிலிண்டர் விலை மாதத்திற்கு ஒரு முறை என மாற்றப்படுகிறது. ஆனால், சில மாதங்களாக ஒரு மாதத்தில் 2, 3 முறை என மாற்றத்தை எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் 2 முறையும், பிப்ரவரி மாதத்தில் 3 முறையும் என விலையில் மாற்றத்தை, அதாவது அதிகரிக்கச் செய்துள்ளது. இந்த வகையில் டிசம்பர் முதல் பிப்ரவரி இறுதி வரையில் மட்டும் ரூ.200 அதிகரித்தனர். இதனால், பெரும்பாலான நகரங்களில் சிலிண்டர் விலை ₹800ஐ எட்டியது.

இந்தச்சூழலில் நடப்பு மாதத்திற்கான (மார்ச்) விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நேற்று அதிகாலை அறிவித்தது. அதில், நாடு முழுவதும் வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர் விலையை ரூ.25 உயர்த்தியது. ஒரு மாத காலத்தில் 4வது முறையாக இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலையை ரூ.95.50 அதிகரித்துள்ளனர். இவ்விலையேற்றம் மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஓராண்டுக்கு பிறகு மீண்டும் வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர் விலை உச்சத்தை தொட்டுள்ளதே இதற்கு காரணம்.

சென்னையில் கடந்த மாதம் ரூ.810க்கு விற்கப்பட்ட சிலிண்டர், நேற்று ரூ.25 உயர்ந்து ரூ.835 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவே டெல்லி, மும்பையில் ரூ.819 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.845.50 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் உச்சகட்டமாக வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை சென்னையில் ரூ.960க்கு விற்கப்பட்டது. இதன்பின், படிப்படியாக குறைந்த நிலையில், மீண்டும் அதிகப்பட்ச விலையாக கடந்தாண்டு (2020) பிப்ரவரி மாதம் ரூ.881க்கு விற்பனையானது. இந்த விலையை ஓராண்டுக்கு பிறகு மீண்டும் தற்போது நெருங்கியுள்ளது.

அதாவது சென்னையில் ரூ.835 ஆக விலை உயர்ந்துள்ளது. நடப்பு மாதம் முடிவதற்குள் ரூ.881ஐ எட்டிவிடும் சூழல் உருவாகியுள்ளது. 19 கிலோ வர்த்தக சிலிண்டர் விலை நடப்பு மாதத்திற்கு ரூ.95.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் 1,635ல் இருந்து ரூ.95.50 அதிகரித்து ரூ.1,730.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவே சேலத்தில் வர்த்தக சிலிண்டர் விலை ரூ.1,691.50 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் ரூ.1,614, கொல்கத்தாவில் ரூ.1,681.50, மும்பையில் ரூ.1,563.50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் கச்சா எண்ணெய் விலை பெருமளவு சரிந்தது. அப்போது அதன் பலனை மக்களுக்கு வழங்காமல், மத்திய, மாநில அரசுகள் வரியை உயர்த்திக் கொண்டன. தற்போது கச்சா எண்ணெய் விலை சற்று உயரவும், அதன் பாதிப்பையும் விலையேற்றமாக மக்கள் தலையில் சுமையாக ஏற்றி வருகிறது. கொரோனா ஊரடங்கு, வேலையிழப்பு பிரச்னையில் இருந்து இன்னும் மக்கள் மீண்டு வராத நிலையில், சமையல் காஸ் சிலிண்டர் விலையேற்றம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இதற்கு முன்பு மானியத்தை கழித்து, சிலிண்டருக்கான விலையை மக்கள் கொடுத்து வந்தனர். அந்த முறையை மாற்றி மானிய தொகையை வங்கியில் செலுத்தும் திட்டத்தை மத்திய பாஜ அரசு அமலுக்கு கொண்டு வந்தது. இதன்படி, அனைவருக்கும் மானியம் வழங்கப்படுகிறதா? என்றால் அதுவும் இல்லை. 30 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே மானியம் வழங்குவதாக கூறப்படுகிறது. முன்பு சிலிண்டர் ரூ.800க்கு விற்கப்படும் போது, மானியமாக ₹300 கிடைக்கும். ஆனால், தற்போது மானியமாக ரூ.35 மட்டுமே கிடைக்கிறது. அந்த மானியமும் முன்னறிவிப்பு ஏதும் இன்றி வாடிக்கையாளர்கள் பலருக்கு நிறுத்தப்பட்டுவிட்டது.

மானியம் வழங்குவதை வெளிப்படை தன்மையோடு எண்ணெய் நிறுவனங்கள் தெரிவிப்பதில்லை. மத்திய அரசின் உத்தரவின் காரணமாக இத்தகைய நடவடிக்கையை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரிக்கப்படுவதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இவ்விலையேற்றம் சாதாரண மக்களை கடுமையாக பாதிப்படையச் செய்துள்ளது. இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலையும், ஹோட்டல்களில் உணவு விலையும் பெருமளவு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Related Stories:

>