×

கடந்த ஆண்டை விட 7% அதிகம்: 2021 பிப்ரவரி மாதத்தில் ஜிஎஸ்டி வரி ரூ.1,13,143 கோடி வசூல்...மத்திய நிதியமைச்சகம் அறிக்கை.!!!

டெல்லி: 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1,13,143 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையைக் கொண்டு வரும் நோக்கத்தில்  2017-ம் ஆண்டின் ஜூலை மாதம் 1-ம் தேதி புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மத்திய அரசு அமல்படுத்தியது. இந்நிலையில், 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாத ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் அறிக்கை  வெளியிட்டுள்ளது.

இதில், 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1,13,143 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த ஜிஎஸ்டி வரி வசூல் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 7% அதிகமாக வசூல் ஆகியுள்ளது. கடந்த 2020-ம்  ஆண்டு பிப்ரவரி ரூ.1,05,361 கோடி ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மத்திய ஜிஎஸ்டி வரியாக 2021 பிப்ரவரி மாதத்தில் ரூ.21,092 கோடியும், மாநில வரியாக ரூ.27,273 கோடியும் வசூல் செய்யப்பட்டுள்ளது. (பொருட்கள் இறக்குமதி செய்ய சேகரிக்கப்பட்ட ரூ.24,382 கோடி உட்பட) ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாக ரூ.55,253  கோடியும், இதுதவிர (பொருட்கள் இறக்குமதி செய்ய சேகரிக்கப்பட்ட 660 கோடி  உட்பட) செஸ் வரியாக ரூ.9,525 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 2020 ஏப்ரல் மாதத்தில் ரூ.32,172 கோடியும், 2020 மே மாதத்தில் ரூ.62,151 கோடியும், 2020 ஜூன் மாதத்தில் ரூ.90,917 கோடியும், 2020 ஜூலை மாதத்தில் ரூ.87,422 கோடியும், 2020 ஆகஸ்ட் மாதத்தில் ரூ.86,449 கோடியும் ,2020 செப்டம்பர்  மாத்தில் ரூ.95,480 கோடியும், 2020 அக்டோபர் மாதத்தில் ரூ.1,05,155 கோடியும், 2020 நவம்பர் மாதத்தில் ரூ.1,04,963 கோடியும், 2020டிசம்பர் மாத்தில் ரூ.1,15,174 கோடியும், ஜனவரி 2021 மாதத்தில் ரூ.1,19,875 கோடியும் வசூல் செய்யப்பட்டிருந்தது.

தமிழகம்:

தமிழகத்தில் 2021 பிப்ரவரி மாதம் ரூ.7,008 கோடி ஜிஎஸ்டி வரி வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டு 2020 பிப்ரவரி மாதம் ரூ.6,426 கோடி ஜிஎஸ்டி வசூலானது குறிப்பிடத்தக்கது.


Tags : Federal Finance Ministry , 7% more than last year: GST collection of Rs 1,13,143 crore in February 2021 ... Federal Ministry of Finance report. !!!
× RELATED மாநிலங்களுக்கு வரி பகிர்வில்...