பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசி..! நாட்டு மக்கள் தயக்கத்தில் இருந்து வெளிவர உதவும்: எய்ம்ஸ் இயக்குனர் பேட்டி

டெல்லி: பிரதமர் மோடிக்கு தடுப்பூசி போட்டது நாட்டு மக்கள் தயக்கத்தில் இருந்து வெளிவந்து தடுப்பூசி செலுத்தி கொள்ள உதவும் என எய்ம்ஸ் இயக்குனர் பேட்டியில் கூறியுள்ளார். கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்ட கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகளை அவசரகால தேவைக்காக போட்டு கொள்வதற்கு அரசு அனுமதி வழங்கியது. இதன்படி கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து அதற்கான பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. எனினும், இந்த தடுப்பூசி போட்டு கொள்பவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படுகிறது என குற்றச்சாட்டுகள் எழுந்தன.

தடுப்பூசி போட்டு கொண்டபின்னர் உயிரிழப்பு ஏற்பட்ட தகவல்களும் வெளிவந்தன. ஆனால், தடுப்பூசி போட்டு கொள்வதனால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என அரசு பதிலளித்தது. இதனால், கொரோனா தடுப்பூசியை முதலில் பிரதமர் மோடி போட்டு கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறிவந்தன. இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசியை இன்று போட்டு கொண்டார். இதுபற்றி டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா இன்று அளித்த பேட்டியில் கூறும்பொழுது, பிரதமர் மோடி தடுப்பூசி செலுத்தி கொண்டார். நாமும், இதுபோன்று நமக்கான முறை வரும்பொழுது தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என நாட்டுக்கு எடுத்து காட்டியுள்ளார்.

இதனால், தடுப்பூசி போட்டு கொள்வதற்கான தயக்கத்தில் இருந்து மக்கள் வெளியே வர இது உதவும். 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை வியாதிகளை உடையவர்கள் என அனைவரும், கொரோனா தடுப்பூசிக்கான முன்பதிவை உடனே செய்து தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என நான் கேட்டு கொள்கிறேன் என கூறியுள்ளார். இதுவரை நாட்டில் மொத்தம் 1 கோடியே 43 லட்சத்து ஓராயிரத்து 266 தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன. உள்நாட்டில் தயாரான கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகளும் இன்று முதல் பொதுமக்களுக்கு கிடைக்கும்.

Related Stories: