ஐபிஎஸ் அதிகாரிக்கே இந்த நிலை என்றால் சாதாரண பெண் காவலர்களின் நிலை என்ன? : டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பாலியல் வழக்கில் நீதிபதிகள் கேள்வி!!

சென்னை : ஐபிஎஸ் அதிகாரிக்கே இந்த நிலை என்றால் சாதாரண பெண் காவலர்களின் நிலை என்ன என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக டிஜிபி திரிபாதியிடம், சம்பந்தப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரியே நேரில் சென்று புகாரளித்தார். இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பிய நிலையில், ராஜேஷ் தாஸ் மீதான புகார் குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரிக்க சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், காவல்துறை அதிகாரிக்கே இந்த நிலைமையா? என அதிருப்தியை வெளிப்படுத்தியது.

இந்த நிலையில், மேற்கண்ட வழக்கு இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் பிற்பகலில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, தன்மீதான பாலியல் தொந்தரவு குறித்து புகார் தர ஒரு பெண் அதிகாரி இந்த அளவுக்கு அலைக்களிக்கப்பட்டுள்ளார் என்றால் பெண் எஸ்ஐ,  பெண் கான்ஸ்டபிளின் நிலையை யோசிக்க முடியவில்லை. இது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.இதை உணர்ந்துதான் அரசியலமைப் பில் நீதிமன்றத்திற்கு தரப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி தானாக வழக்கு விசாரணக்கு எடுக்கப்பட்டுள்ளது.

பெண் அதிகாரி மீதான பாலியல் தொந்தரவு  வழக்கை நீதிமன்றம் கண்காணிக்கும். இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். சம்மந்தப்பட்ட பெண் அதிகாரியின் பெயரை பயன்படுத்தவோ, வெளியிடவோ  கூடாது. இந்த வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரி அப்போதைக்கப்போது விசாரணை முன்னேற்றம் குறித்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.இந்த வழக்கு தலைமை நீதிபதிக்கு உரிய உத்தரவுக்காக பரிந்துரைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

Related Stories: