சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பாலியல் புகார் கூறிய பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு அச்சுறுத்தல் அதிகரிப்பது வெட்கக்கேடானது : தமிழக எம்.பி.க்கள் ஆவேசம்!!

சென்னை : சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகாரை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என திமுக எம்.பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக டிஜிபி திரிபாதியிடம், சம்பந்தப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரியே நேரில் சென்று புகாரளித்தார். இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பிய நிலையில், ராஜேஷ் தாஸ் மீதான புகார் குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரிக்க சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், காவல்துறை அதிகாரிக்கே இந்த நிலைமையா? என அதிருப்தியை வெளிப்படுத்தியது.

இந்த நிலையில், ராஜேஷ் தாஸ் மீதான வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டுமென திமுக எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், இந்த விஷயத்தில் நியாயமான விசாரணையை நாங்கள் விரும்புவதால் டி.ஜி.பி மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும். சம்பந்தப்பட்ட மற்ற அதிகாரிகளை உடனடியாக இடைநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பெண் ஐ.பி.எஸ் அதிகாரி அச்சுறுத்தல்களைப் பெற்று வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது வெட்கக்கேடானது என குறிப்பிட்டுள்ளார்.

இதே போல், காங்கிரஸ் எம்பி ஜோதிமணி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,டிஜிபிக்கு எதிராக பாலியல் புகார் அளித்த பெண் காவல்துறை அதிகாரி மிரட்டப்படுவதாக வரும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது. இடைநீக்கம் செய்யாமல் டிஜிபி யை தொடர்ந்து பாதுகாக்கும் எடப்பாடி அரசின் செயல்பாடு கண்டனத்திற்குரியது. வெட்கக்கேடானது. உடனடியாக  விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்கவேண்டும், என்று கூறினார்.

Related Stories: