ஆளுங்கட்சியின் முறைகேடு, அராஜகங்களை கண்டித்து திருப்பதி விமான நிலையத்தில் சந்திரபாபு நாயுடு தர்ணா!: போலீசாரிடம் ஆவேசம்..!!

ஹைதராபாத்: ஆந்திராவில் ஆளுங்கட்சியினரின் முறைகேடுகள் மற்றும் அராஜகங்களை கண்டித்தும் போராட்டம் நடத்த விதிக்கப்பட்ட தடையை கண்டித்தும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு,  திருப்பதி விமான நிலையத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ஆந்திராவில் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்களில் ஆளுங்கட்சியினர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. மேலும் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடாமல் ஆளும் கட்சியினர் உரிய அழுத்தம் கொடுத்து அவர்கள் தேர்தலில் போட்டியிடாமல் தடுத்து நிறுத்திவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில் ஆளுங்கட்சியினரின் முறைகேடு, அராஜகம் ஆகியவற்றைக் கண்டித்து திருப்பதி மற்றும் சித்தூர் ஆகிய இடங்களில் போராட்டம் நடத்த தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு திட்டமிட்டிருந்தார். இதற்கு அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். இந்நிலையில் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக விஜயவாடாவில் இருந்து திருப்பதிக்கு வந்த சந்திரபாபு நாயுடு, விமான நிலையத்தில் இருந்து வெளியேற தடை விதித்த அதிகாரிகள் அவரை அதே விமானத்தில் விஜயவாடாவுக்கு திருப்பி அனுப்பவும் முடிவு செய்துள்ளனர்.

இதனை கண்டித்து சந்திரபாபு நாயுடு, திருப்பதி விமான நிலையத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனிடையே சித்தூர், திருப்பதி உள்ளிட்ட இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். சந்திரபாபு நாயுடுவை சித்தூர் செல்ல அனுமதித்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை உருவாகும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மாநிலத்தில் சுற்றுப்பயணம் செல்வதற்கு உரிமை இல்லையா? என அக்கட்சியின் மாநில தலைவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

Related Stories: