×

அதிமுக கூட்டணியில் விரிசல்?.. மக்கள் நீதி மய்யம் அல்லது அமமுக கூட்டணிக்கு தாவுகிறதா தேமுதிக?.. பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை

சென்னை: அதிமுக - தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜ, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இருந்தன. இதே கூட்டணியை வரும் சட்டமன்ற தேர்தலில் தொடர கூட்டணி கட்சி தலைவர்கள் விரும்பினர். இதற்காக, தங்களுக்கு வேண்டிய தொகுதிகளை பெற கட்சிகள் மும்முரம் காட்டின. அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக, நாங்கள் தான் 3வது பெரிய கட்சி. தங்களுக்கு ஜெயலலிதா இருந்த போது ஒதுக்கிய 41 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது.

ஆனால், அதிமுக தலைவர்கள் தேமுதிகவை ஒரு பொருட்டாகவே கண்டு கொள்ளவில்லை. இதனால் விரக்தியடைந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா, ‘‘ராமதாஸை தேடி, தேடி சென்று கூட்டணி குறித்து பேசும் அமைச்சர்கள், தங்களை மதிப்பதில்லை’’ என வெளிப்படையாகவே குமுறி இருந்தார். பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு’ என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனாலும் அதிமுக, தேமுதிகவை உதாசீனப்படுத்தி வருகிறது. இதற்கு முக்கிய காரணம், தேமுதிக வாக்கு வங்கி மிகக்குறைவாக உள்ளதாலும், செல்வாக்கு குறைந்து விட்டதாலும் அவர்களுக்கு 4 முதல் 8 சீட் வழங்கலாம் என அதிமுக தலைமை முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் பிரேமலதா, ‘‘விரைவில் எங்களை அழைத்து பேசவில்லை என்றால் தனித்து போட்டியிடவும் தயங்க மாட்டோம்’’ என தெரிவித்திருந்தார். இருப்பினும், அதிமுக அவர்களை ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ளவில்லை. இந்நிலையில் அதிமுக - தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் தங்கமணி இல்லத்தில் நடைபெற இருந்த நிலையில் பேச்சுவார்த்தை திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேமுதிக தரப்பில் இருந்து பேச்சுவார்த்தைக்கு யாரும் முன்வராத நிலையில் கூட்டணிப் பேச்சு ரத்து செய்யப்பட்டுள்ளது. பாமகவுக்கு கொடுக்கும் முக்கியத்தவத்தை தங்களுக்கு தரவில்லை என தேமுதிக நிர்வாகிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

அதிமுகவுடனான பேச்சுவார்த்தை ரத்தான நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சென்னை சாலிகிராமம் இல்லத்தில் பிரேமலதா விஜயகாந்துடன் நிர்வாகிகள் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர். எதிர்ப்பார்த்த தொகுதிகள் கிடைக்காததால் மக்கள் நீதி மய்யம், அமமுக கூட்டணிக்கு தேமுதிக தாவலாம் என தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Premalatha Vijayagant , Cracks in AIADMK alliance? .. People's Justice Center, is Temujin jumping to AIADMK alliance? .. Premalatha Vijayakand consultation
× RELATED நடைபெறும் மக்களவை தேர்தலில் சாதனை...