தேர்தல் நடத்தை விதி எதிரொலி!: பட்டுப்புடவைகள் வாங்க மின்னணு பரிவர்த்தனையை பயன்படுத்தவும்..காஞ்சி மாவட்ட நிர்வாகம் அறிவுரை..!!

காஞ்சிபுரம்: தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளதால் பட்டுப்புடவைகள் வாங்க மின்னணு பரிவர்த்தனையை பயன்படுத்துமாறு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளதால் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேலாக பணம் கொண்டு செல்ல ஆவணங்கள் வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் தொடர்ச்சியாக சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தங்களுடைய பல்வேறு சுப நிகழ்ச்சிகளுக்கு பட்டுப்புடவை வாங்க பல்வேறு மாநில, மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பட்டு நகரமான காஞ்சிபுரத்திற்கு அதிகளவு வருவது வழக்கம். இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள சூழலில் பணத்துடன் பொதுமக்கள் காஞ்சி நகரத்திற்கு படையெடுத்து வருவதால் சோதனை அதிகாரிகள் மற்றும் மக்களுக்கு இடையே பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் சூழல் உண்டாகிறது.

எனவே இதனை தவிர்க்கும் நோக்கில் மின்னணு பண பரிவர்த்தனை மூலமாக பொருட்களை வாங்கி ரசீது பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்னணு பரிவர்த்தனையை பயன்படுத்துவதன் மூலமாக பல்வேறு கசப்பான நிகழ்வுகளை தவிர்க்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories:

>