தமிழக மண்ணில் பாஜக ஒருபோதும் மலராது.. என் கடைசி மூச்சுவரை பாஜகவை எதிர்ப்பேன் : ப.சிதம்பரம் அட்டாக்

சிவகங்கை : அதிமுக அரசு வெற்றி நடைபோடும் அரசு இல்லை, வெற்றுப்பேச்சு அரசு என சிவகங்கையில் பிரச்சார கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசினார்.சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மத்தியில் ப.சிதம்பரம் பேசியதாவது, ‘தேர்தல் அறிவிப்பு வரப்போகிறது என்று தெரிந்தவுடன் அவசர அவசரமாக விவசாய நகைக்கடன் தள்ளுபடி என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துவிட்டார். இன்னும் நேரம் கிடைத்திருந்தால் மளிகைக்கடை கடன் தள்ளுபடி, நண்பர்களிடம் வாங்கிய கைமாத்து கடன் ரத்து என அறிவித்திருப்பார். பட்ஜெட் என்றால் அது 5 நாட்களுக்கு முன்பே தாக்கல் செய்ய வேண்டும். அதுகூட தெரியவில்லை என்றால் இதைவிட வெற்றுப்பேச்சு வேறு எதுவும் இருக்க முடியாது. அதிமுக அரசு வெற்றிநடை போடும் அரசு இல்லை, வெற்றுப்பேச்சு அரசு.

விவசாய நகைக்கடன் மொத்த தொகை எவ்வளவு என்று அறிவிக்காமலேயே தள்ளுபடி என்றால் யார் நம்புவார்கள். யாரும் நம்பமாட்டார்கள். அதிமுகவில் முதலில் நடைபெற்ற 5 ஆண்டுகள் கொள்ளை ஆட்சி. அமைச்சரவையை கூட கூட்டாமல் 110 விதியின் கீழ் நகை கடன் ரத்து செய்தது விதி மீறல். ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிதான் கடன் கொடுத்தது. நகை கடன் தள்ளுபடி செய்ய அரசுக்கு அதிகாரம் இல்லை. தமிழகத்தில் மூன்றாவது அணி அமைக்கும் கட்சிகள் அனைத்துமே மறைமுகமாக பாஜகவுடன் பேசி வருகிறார்கள். தமிழக மண்ணில் பாஜக ஒருபோதும் மலராது. பாஜக எனும் நச்சு செடி வேரூன்ற தமிழக மக்கள் அனுமதிக்கமாட்டார்கள். என் கடைசி மூச்சுவரை பாஜகவை எதிர்ப்பேன். டெல்லியில் போராடும் விவசாயிகளை ஆட்சியாளர்கள் இரவில் முண்டாசு கட்டிக் கொண்டு சந்தித்திருக்கலாம். பகலில் சந்தித்தால் முதலாளிகளின் கோபத்திற்கு ஆளாவதை தவிர்க்க இரவிலாவது சந்தித்து பேசியிருக்கலாம்,என்றார்.

Related Stories:

>