பிறந்தநாளை முன்னிட்டு பெரியார், அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மு.க.ஸ்டாலின் மரியாதை: தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார்!!

சென்னை : தனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 68வது பிறந்தநாளை கொண்டாடும் ஸ்டாலின், காலையிலேயே மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்திற்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். அடுத்ததாக கலைஞர் நினைவிடத்திலும் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்திற்கு சென்ற ஸ்டாலினுக்கு 2000த்திற்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் செண்டை முழங்கம் வரவேற்பு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து பெரியார் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அப்போது மு.க.ஸ்டாலினுக்கு திராவிடர் கழகத் தலைவர் கீ வீரமணி புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து கீழ்ப்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகனின் வீட்டிற்கு சென்று அவரது உருவப்படத்திற்கு மலர்தூவிய பின், கோபாலபுரம் இல்லத்திற்கு சென்றார். அங்கு கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினார். பின்னர் தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார். பிறந்தநாளை ஒட்டி ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் கட்சியினரையும் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். இதனால் அப்பகுதி முழுவதும் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களால் களைகட்டியுள்ளது.

Related Stories: