கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் பிரதமர் மோடி..! பிரதமருக்கு புதுச்சேரி செவிலியர் நிவேதா தடுப்பூசி செலுத்தினர்!

டெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதில், முதல் கட்டமாக மருத்துவர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட 3  கோடி முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக, ஆக்ஸ்போர்டு பல்கலை.யின் கோவிஷீல்டு தடுப்பூசியும், இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவோக்சின் தடுப்பூசியும் பயன்படுத்தப்படுகிறது.

இதையடுத்து நாடு முழுவதும் முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோயுள்ளவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. இதனிடையே இந்த தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு பின்விளைவுகள் ஏற்படுவதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், இந்த தடுப்பூசியை முதலில் பிரதமர் மோடி போட்டுக் கொள்ள வேண்டும் என்று பல்வேறு எதிர்க்கட்சிகள் கூறி வந்தனர். இந்நிலையில் பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; டெல்லி எய்ம்ஸில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்தேன்.

கொரோனாவுக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை வலுப்படுத்த எங்கள் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் விரைவான நேரத்தில் எவ்வாறு பணியாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மூத்த குடிமக்கள் உள்ளிட்ட தடுப்பூசி எடுக்க தகுதியுள்ள அனைவருக்கும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அச்சப்பட வேண்டாம். ஒன்றாக, இந்தியவை கொரோனாவில் இருந்து விடுவிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

புதுச்சேரியைச் சேர்ந்த செவிலியர் நிவேதா, பிரதமர் மோடிக்கு கோவாக்சின் தடுப்பூசி போட்டார் என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மாநில முதல்வர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

>