நகை கடை உரிமையாளரிடம் கத்திமுனையில் 300 சவரன் நகை கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது: 3 பேருக்கு போலீசார் வலை

ஸ்ரீபெரும்புதூர்: திருவள்ளூரில் நகை கடை வைத்து நடத்தி வருபவர் மகேந்திரன். இவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் சிறு நகை கடைகளுக்கு நகைகள் செய்து விற்பனை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் தேதி சேகர் என்பவரின் ஆட்டோவில் ஸ்ரீபெரும்புதூரில் நகைகளை விற்பனை செய்வதற்காக சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மகேந்திரன் வந்து கொண்டிருந்தார்.  அப்போது மாம்பாக்கம் பகுதியை வந்தடைந்தபோது ஆட்டோவை வழிமறித்த மர்ம கும்பல் மகேந்திரனை கத்திமுனையில் மிரட்டி அவரிடம் இருந்து 300 சவரன் நகைகளை கொள்ளையடித்து கொண்டு தப்பினர்.

 இதுதொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்த நிலையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு போலீசார் உட்பட 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவர்களிடம் இருந்து 200 சவரனை பறிமுதல் செய்தனர். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் சிலரை போலீசார் தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில்  ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வெங்காடு பகுதியில்  நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பைக்கில் வந்த இருவரை மடக்கி சோதனையிட்டனர். அதில் இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்த காரணத்தினால் இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த டிசம்பர் மாதம் நகைக்கடை உரிமையாளரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் என தெரியவந்தது. சம்பவத்தில் ஈடுபட்டதாக சென்னை வியாசர்பாடியை பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன்(26), திவாகர் (25) ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 35 சவரன் நகைகளை கைப்பற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான 3 பேரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.   

Related Stories: