பிரசாரத்தைத் தொடங்கியது காங்கிரஸ் மே.வங்கத்தை இரு துருவ அரசியலாக சித்தரிக்கிறார்கள்: மம்தாவும் மோடியும் ஒன்றுதான்

கொல்கத்தா: ‘பாஜ.வும் திரிணாமுல் காங்கிரசும் மேற்கு வங்கத்தை இருதுருவ அரசியல் போல் சித்தரிக்கிறார்கள்,’ என்று காங்கிரஸ் கடுமையான விமர்சனத்துடன் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளது. மேற்கு வங்கத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று பேரணி மூலம் தனது பிரசாரத்தை காங்கிரஸ் கூட்டணி தொடங்கியது. அப்போது, மாநில காங்கிரஸ் கட்சித் தலைவரான அதிர் ரஞ்சன் சவுத்ரி பேசியதாவது: மேற்கு வங்கத் தேர்தலானது காங்கிரஸ் இல்லாமல், பாஜ - திரிணாமுல் என்ற போட்டிக்கு இடையிலும் இருதுருவப் போட்டியாக சித்தரிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், இங்கு கூடியுள்ள கூட்டம் அதை பொய் என்று நிரூபித்துள்ளது. காங்கிரஸ்-இடது சாரிகளின் கூட்டணி திரிணாமுல் காங்கிரஸ், பாஜ.வை வீழ்த்தும். பாஜ-திரிணாமுல் இடையே ரகசிய ஒப்பந்தம் உள்ளது. இருவருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை’’ என்றார். மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளார் சீதாராம் யெச்சூரி பேசுகையில், ‘‘தொங்கு சட்டசபை அமைந்தால் திரிணாமுல் காங்கிரஸ் பாஜவுடன் நிச்சயம் கூட்டணி அமைக்கும். பாஜவையும், திரிணாமுல் காங்கிரஸையும் வீழ்த்த வேண்டும்.’’ என்றார். மற்றொரு கூட்டணிக் கட்சியான இந்திய மதசார்பற்ற முன்னணி தலைவர்அப்பாஸ் சித்திக் பேசுகையில், ‘‘மம்தாவின் அகம்பாவத்துக்கு தேர்தலில் பொதுமக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள்’’ என்றார்.

Related Stories:

>