தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி இன்று அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை

சென்னை: சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி அரசியல் கட்சிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். இக்கூட்டத்தில் அரசியல் கட்சியினர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது. தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது.  வருகிற 12ம் தேதி முதல் வேட்புமனுதாக்கல் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்று பரவலை கவனத்தில் கொண்டு வாக்குப்பதிவு மற்றும் அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் 60 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்கள் இருந்தது. தற்போது கொரோனா காரணமாக 88 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  

இது தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு தெளிவுப்படுத்தும் வகையிலும், சட்டப்பேரவை தேர்தலை அமைதியாக நடத்துவது, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்காக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு 9 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இன்று காலை 12.30 மணிக்கு தலைமை செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில், திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜ, கம்யூனிஸ்ட் கட்சிகள், தேமுதிக உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இதில், தேர்தல் தொடர்பான பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் கட்சியினர் பின்பற்ற வேண்டிய அறிவுரைகள் தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.

ஏற்கனவே, 80 வயதானவர்களுக்கு தபால் வாக்குகள் வழங்குவது தொடர்பாக உள்ள பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தன. இந்த நிலையில், இக்கூட்டத்தில் மீண்டும் இப்பிரச்னை குறித்து எடுத்து வைக்கப்படவுள்ளது. மேலும், ஆளும்கட்சியினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க, உள்ளூர் போலீசாரை தணிக்கையில் ஈடுபடுத்துவதை தவிர்க்கவும், துணை ராணுவத்துக்கு உதவியாக வெளிமாநில போலீசாரை பணியமர்த்தவும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக எதிர்க்கட்சியினர் தலைமை தேர்தல் அதிகாரியிடம் இக்கூட்டத்தில் வலியுறுத்த திட்டமிட்டுள்ளனர்.

ஆளும்கட்சியினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க, உள்ளூர் போலீசாரை ஈடுபடுத்துவதை தவிர்க்க வலியுறுத்துவார்கள்.

Related Stories: