ஐசிசி டெஸ்ட் தரவரிசை 3வது இடத்துக்கு முன்னேறினார் அஷ்வின்: முதல் முறையாக ரோகித் 8வது ரேங்க்

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சு தரவரிசையில், இந்திய அணி ஸ்பின்னர் ஆர்.அஷ்வின் 3வது இடத்துக்கு முன்னேறினார். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியுடன் மோதப் போவது யார் என்பது, இந்தியா - இங்கிலாந்து அணிகளிடையே நடைபெற உள்ள 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முடிவைப் பொறுத்தே அமைய உள்ளது. இந்நிலையில், நடப்பு தொடரில் அபாரமாக செயல்பட்டு வரும் இந்திய வீரர்கள், ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர்.

ஐசிசி நேற்று வெளியிட்ட பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய அணி நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் 823 புள்ளிகளுடன் 4 இடங்கள் முன்னேறி 3வது இடத்தை பிடித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற 2வது டெஸ்டில் அறிமுகமாகி இரண்டே போட்டியில் 18 விக்கெட் கைப்பற்றி அசத்திய அக்சர் பட்டேல் ஒரேயடியாக30 இடங்கள் முன்னேறி 38வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே சமயம், இந்திய வேகம் ஜஸ்பிரித் பும்ரா (746 புள்ளி) 1 இடம் பின்தங்கி 9வது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் (908), நியூசிலாந்தின் நீல் வேக்னர் (825) தொடர்ந்து முதல் 2 இடங்களில் நீடிக்கின்றனர்.

பேட்டிங் தரவரிசையில் இந்திய அணி தொடக்க வீரர் ரோகித் ஷர்மா (742 புள்ளி) 6 இடங்கள் முன்னேறி முதல் முறையாக 8வது இடத்தை பிடித்துள்ளார். கேப்டன் விராத் கோஹ்லி (836) 5வது இடத்தை தக்கவைத்துள்ள நிலையில், செதேஷ்வர் புஜாரா 2 இடம் பின்தங்கி 10வது இடத்தில் உள்ளார். நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் (919), ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் (891), லாபுஷேன் (878) முதல் 3 இடங்களை ஆக்கிரமித்துள்ளனர். பேட்டிங்கில் சற்று தடுமாற்றம் கண்டுள்ள இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 853 புள்ளிகளுடன் 4வது இடத்தில் நீடிக்கிறார். ஆல் ரவுண்டர்களுக்கான ரேங்கிங்கில் வெஸ்ட் இண்டீசின் ஜேசன் ஹோல்டர் (407) முன்னிலை வகிக்கிறார். இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 2வது இடத்திலும், ஆர்.அஷ்வின் 5வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

Related Stories: