செயின் பறிப்பை தடுக்க முயன்ற பெண் படுகொலை: டெல்லியில் பரிதாபம்

புதுடெல்லி: வடமேற்கு டெல்லியின் ஆதர்ஷ் நகரை சேர்ந்தவர் சிம்ரன் கவுர். இவர் நேற்று முன்தினம் இரவு தனது இரண்டு வயது குழந்தை மற்றும் தாயுடன் கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.  அவர் தனது வீட்டை நெருங்கிய நிலையில் பின்னால் வந்த ஒருவன் சிம்ரனின் கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்றான். ஆனால் உடனடியாக சுதாரித்துக்கொண்ட சிம்ரன் செயினை பிடித்துக்கொண்டதோடு, அந்த நபரை துரத்தி சென்றார். அப்போது செயின் பறிக்க வந்தவன் தவறி கீழே விழுந்தான். கையில் கத்தியுடன் இருந்த அவன் சிம்ரனை சரமாரியாக குத்திவிட்டு தப்பி சென்றான். இதனை தொடர்ந்து உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். செயின் பறிப்பு மற்றும் கொலை நடந்த இடத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் காவல்துறை சாவடி உள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இது தொடர்பாக கொலையாளியை பிடிக்க 10 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories:

>