தேர்தல் ஆணையத்தில் பாஜ தலையீடு: திருமாவளவன் குற்றச்சாட்டு

அவனியாபுரம்: மேற்குவங்கத்தில் 8 கட்டமாக தேர்தல் நடத்துவதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி குற்றம் சாட்டியுள்ளார். விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி மதுரையில் நேற்று அளித்த பேட்டி: தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்கவில்லை. தேர்தல் ஆணையத்தில் பாஜவின் தலையீடு உள்ளதை தேர்தல் அறிவிப்புகள் மூலம் அறிய முடிகிறது. மேற்குவங்கத்தில், தமிழகத்தை விட 60 தொகுதிகள்தான் அதிகம். தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. ஆனால் மேற்குவங்கத்தில் 8 கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. இதில் அரசியல் உள்நோக்கம் உள்ளதை அறிய முடிகிறது.

தமிழகத்தில் கடந்த 1931ல் சாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. அதன்பின்னர் சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. கடந்த 2011ல் மக்கள் தொகை கணக்கெடுப்புதான் நடந்தது. அதனடிப்படையில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரினார். தற்போது 10.5 சதவீத இடஒதுக்கீட்டிற்கு அவர் ஒப்புக்கொண்டுள்ளார். அப்படியென்றால் மீதமுள்ள 9.5 சதவீத வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டாரா? அனைத்தையும் தேர்தல் நாடகமாகவே கருத வேண்டியுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் ஒவ்வொரு சமூகத்தினரும் எத்தனை சதவீதம் உள்ளனர் என்பதை ஆதாரப்பூர்வமாக அறிய முடியும். தமிழக அரசின் கடன் தள்ளுபடி அறிவிப்பு வெறும் அறிவிப்புகளாக மட்டுமே உள்ளன. இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories:

>