மூலிகை பெட்ரோல் தயாரிக்க பிரதமர் அலுவலகம் மூலம் கடிதம் பெற முயற்சியா? ராமர் பிள்ளைக்கு சிபிசிஐடி சம்மன்

சென்னை: பிரதமர், ஆளுநர் பெயரை கூறி மூலிகை பெட்ரோல் தயாரிக்க பிரதமர் அலுவலகத்தின் பரிந்துரை கடிதம் பெற முயற்சி செய்தாரா என்பது குறித்து விசாரணை நடத்த ராமர் பிள்ளைக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

சென்னை தி.நகரை தலைமையிடமாக கொண்டு பிரதமர் மற்றும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் பெயர்களில் மத்திய அரசு டெண்டர்கள், பாஜ கட்சி சார்பில் எம்.பி. சீட் வாங்கி தருவதாக பல கோடி மோசடி செய்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த மோசடி நபர்களான மகாதேவ் ஐயா (59), அவரது மகன் அங்கீத் (29) மற்றும் ஒசூரை சேர்ந்த புரோக்கர் ஓம் (49) ஆகிய மூவரையும் அதிரடியாக கடந்த 10ம் தேதி கைது செய்தனர்.

மேலும், அவர்களிடம் நடத்திய விசாரணையில் ‘ராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் தயாரிப்பதற்கான காப்புரிமை பெற பிரதமர் அலுவலகத்தில் பரிந்துரை கடிதம் பெற்று தரக்கோரி தங்களிடம் பல முறை முயற்சி செய்ததாக தெரிவித்துள்ளனர்’. குற்றவாளிகள் 3 பேர் அளித்த வாக்குமூலத்தின் படி சிபிசிஐடி போலீசார் ராமர் பிள்ளையிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். அதன்படி ராமர் பிள்ளைக்கு சிபிசிஐடி போலீசார் சம்பவம் குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்பி உள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணைக்கு பிறகு தான், இந்த மோசடியில் ராமர் பிள்ளைக்கு என்ன தொடர்பு உள்ளது என தெரியவரும்.

Related Stories:

>