ஜி.கே.வாசன் பேட்டி காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு மத்திய அரசு துணை நிற்கும்

சென்னை: காஞ்சிபுரத்தில் கட்சி நிர்வாகி திருமண விழாவிற்கு வந்த தமாகா தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு கர்நாடகா அரசு எதிர்ப்பு தெரிவிப்பது கண்டிக்கத்தக்கது. வெள்ளம் ஏற்படும் காலத்தில் காவிரியில் உபரி நீராக வெளியேறும் நீரை தமிழகம் பயன்படுத்துவதற்கு காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் பயன்படும்.  வெள்ளப்பெருக்கின் போது ஏற்படும் உபரி நீரை தமிழகம் பயன்படுத்துவதற்கு கர்நாடகா எதிர்ப்பு தெரிவிப்பது நியாயமற்ற மனிதாபிமானமற்ற செயல். தமிழகத்தில் தொடங்கப்பட்ட இத்திட்ட பணிகள் தொடர்ந்திட கர்நாடக அரசு எந்தவிதத்திலும் தடையாக இருக்கக்கூடாது.

அதற்கு ஏற்றவாறு மத்திய அரசிடம் தமிழக அரசு எடுத்து செல்லும். தமிழக அரசுக்கு மத்திய அரசு துணை நிற்கும். பெண் ஐபிஎஸ் அதிகாரி பாலியல் புகார் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஜி.கே.வாசன்,  இது ஒரு அன்றாட பிரச்சினை, இதைக் கையாள வேண்டியது அரசு துறையின் கடமை. இதில் தவறு செய்தவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்டவருக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தலைவர் மலையூர் புருஷோத்தமன், மாநில பொது செயலாளர் சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories:

>