திருப்பூரில் பல லட்சம் ரூபாய் பணத்துடன் ஏடிஎம் இயந்திரத்தை கயிற்றில் கட்டி இழுத்து காரில் கடத்திச்சென்ற மர்ம கும்பல்: வடமாநில கொள்ளையர்களின் கைவரிசையா?

திருப்பூர்: திருப்பூரில் பல லட்சம் ரூபாய் பணத்துடன் தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை கயிற்றில் கட்டி இழுத்து காரில் நேற்று அதிகாலை மர்ம கும்பல் கடத்தியது. சிசிடிவியில் பதிவான இந்த காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர், ஊத்துக்குளி ரோடு கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் ஒரு தனியார் வங்கி உள்ளது. இந்த வங்கி வளாகத்தில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு நேற்று அதிகாலை 5 மணிக்கு நான்கு பேர் கொண்ட கும்பல் வந்தது. அங்கிருந்த கண்காணிப்பு கேமராவுக்கு ஸ்பிரே அடித்து ஏடிஎம் இயந்திரத்தை கயிறு கட்டி கார் மூலம் இழுத்து கடத்தி சென்றது.

தகவலறிந்து ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும், கொள்ளை போன ஏடிஎம் இயந்திரத்தில் கடந்த 27ம் தேதி ரூ.18 லட்சம் நிரப்பப்பட்டுள்ளது. தற்போது, எவ்வளவு பணம் இருந்தது என வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளை அடிப்பதற்கு கும்பல் பயன்படுத்திய கார், பெருந்துறை அடுத்த நல்லிக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு சொந்தமானது. அந்த கார், தற்போது மின்வாரியத்துக்கு வாடகைக்கு இயக்கப்பட்டு வந்துள்ளது. நேற்று இரவு அந்த காரை திருடிய கும்பல், ஏடிஎம் இயந்திரத்தை கடத்த பயன்படுத்தி உள்ளது.

பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் மூங்கில்பாளையம் பிரிவு அருகே காலி இடத்தில் காரை நிறுத்திவிட்டு, ஏடிஎம் இயந்திரத்தை மட்டும் கொள்ளையர் எடுத்துக்கொண்டு தப்பியுள்ளனர். கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த காரை போலீசார் பறிமுதல் செய்தனர். `கொள்ளை நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, கொள்ளையர்கள் முகமூடி அணிந்திருந்தது தெரியவந்தது. அவர்கள் வடமாநில கொள்ளையராக இருக்கலாம் என சந்தேகிக்கிறோம்’ என போலீசார் கூறினர்.

Related Stories: