எடுத்தோம்... கவிழ்த்தோம்...

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். தேர்தல் நடத்தை விதிகளை வாக்காளர்கள், வேட்பாளர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டுமோ இல்லையோ அதனை நடைமுறைப்படுத்துகின்ற, கண்காணிக்கின்ற அதிகாரிகள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் அதிகாரிகளின் நடவடிக்கைகளே குழப்பத்தை ஏற்படுத்த காரணமாக மாறிவிடும். கடந்த பொதுத்தேர்தல் வேளையில் தமிழகத்திலேயே நாகர்கோவில் மாநகர பகுதியில் மட்டும் அனைத்து கொடிக்கம்பங்களையும் பீடங்களோடு பெயர்த்து சென்று கொடிகம்பங்கள் இல்லாத நகரமாக மாற்றினர். ஆனால், தமிழகத்தில் பிற மாவட்டங்களில் ஏதும் இதுபோன்று நடைபெறவில்லை. அதனை போன்று கடந்த தேர்தலின்போது நாகர்கோவில் நகரின் மையப்பகுதியில் உள்ள தலைவர்களின் சிலைகளை திடீரென்று துணிகளால் மூடி வைத்தனர். பின்னர் அவர்களே திறந்தும் வைத்தனர்.

இந்தமுறையும் நாகர்கோவிலில் இந்திராகாந்தி சிலை ஒன்றை மாநகராட்சி பணியாளர்கள் திடீரென்று துணிகளால் மூடி பீடத்தையும் மறைத்து வைத்தனர். ஆனால், காங்கிரஸ் கட்சியினர் இதுபற்றி உயர் அதிகாரிகளிடம் விளக்கவே சில மணி நேரத்தில் மீண்டும் வந்து சிலை, பீடத்தை சுற்றியிருந்த துணிகளை அகற்றினர். இதுபோன்ற எடுத்தோம் கவிழ்த்தோம் பணிகள் தேர்தல் முடியும் வரை தொடரும் என்பதால் அதிகாரிகளுக்கு தேர்தல் தொடர்பான முழுமையான பயிற்சி ஆரம்பத்திலேயே அவசியம் என்கின்றனர் அரசியல் கட்சியினர்.

* ஒட்டு மொத்த தேர்தல் செலவே ரூ.20 ஆயிரம் தான்!

இந்தியாவின் அரசியல் நிர்ணய சபை என்ற முதல் பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருந்தவர் திருச்செங்கோட்டை சேர்ந்த டி.எம்.காளியண்ண கவுண்டர். நூறு வயதான அவர், ஆயிரம் பள்ளிகள் திறந்த சாதனையாளர். கஸ்தூரிபட்டி என்ற ஊருக்கு ஜமீன்தாராக இருந்த போதிலும் 1956ல் கொண்டுவரப்பட்ட ஜமீன்தாரி முறை ஒழிப்புக்கு ஆதரவு கொடுத்தவர். 36 முறை மக்களவை, சட்டசபை, எம்எல்சி ஆகிய பதவிகளுக்கு போட்டியிட்ட முதுபெரும் காங்கிரஸ் தலைவர். தனது தேர்தல் அனுபவங்களை இப்படி பெருமிதத்துடன் பகிர்ந்து கொள்கிறார்.

‘‘1952ல் ராசிபுரம் தொகுதியில காங்கிரஸ் சார்பா காளைமாட்டு சின்னத்தில போட்டியிட்டு வெற்றி பெற்றேன். அப்போதெல்லாம் தேர்தல் பிரசாரம் ராத்திரிதான் நடக்கும். பெட்ரோமேக்ஸ் லைட்டுகளுடன் ஊர்மக்களையெல்லாம் சந்திப்போம். ராசிபுரத்தில் போட்டியிட்டப்போ அந்த தொகுதியை சேர்ந்த போதமலை, மேலூர், கீளூர், கெடமலை ஆகிய மலைக்கிராமங்களுக்கு பாதை வசதியே இல்ல. நடந்து தான் போகணும். ஊர் மக்கள்லாம் எங்களை கண்டுக்கவே மாட்டாங்க. பொட்டி வந்துடுச்சான்னுதான் கேட்பாங்க. இப்போதைய பெட்டி அல்ல.

கூம்பு வடிவத்துடன் கூடிய ஒலிபெருக்கியுடன் கூடிய கிராமபோன் பெட்டிதான் பொட்டி. அப்போதைய பெரும் அட்ராக்சன் சினிமா நடிகர்களும், சினிமா பாட்டுகளும்தான். ஒலிபெருக்கியில் சினிமா பாட்டு ஒலித்தவுடன் பொட்டி வந்துவிட்டது என்று கத்திக்கொண்டே இளைஞர்கள், பெண்கள் ஊர் மக்கள் வருவாங்க. அவங்ககிட்ட வாக்கு கேட்போம். அந்த தேர்தல்ல நான் செலவு செஞ்ச ஒட்டு மொத்த செலவு ரூ.20 ஆயிரம்தான். ஓட்டுக்கு பரிசோ, பணம் கொடுப்பதோ இல்லாத காலம் அது,’’ என்றார் காளியண்ண கவுண்டர்.

Related Stories: