சென்னையில் சாலையோரம் வசிக்கும் குழந்தைகளில் 5 வயதுக்கு உட்பட்ட 66% பேருக்கு ஊட்டச்சத்து திட்டம் சென்று சேரவில்லை: மறுவாழ்வு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை; ஒருங்கிணைந்த கொள்கை வகுக்க கோரிக்கை

சென்னை: சென்னையில் சாலையோரம் வசிக்கும் குழந்தைகளில் 5 வயதுக்குட்பட்ட 66 சதவீதம் பேருக்கு அரசின் ஊட்டச்சத்து திட்டம் சென்று சேரவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. எனவே இவர்களுக்கான மறு வாழ்வு திட்டங்களை செயல்படுத்த முறையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. நாட்டில் மக்கள் தொகை அதிகரித்து வரும் காரணத்தால், நகரத்தை நோக்கி வரும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது. மத்திய அரசு வெளியீட்டுள்ள ஆய்வின்படி 2036ம் ஆண்டில் மொத்த மக்கள் தொகையில் 38 சதவீதம் பேர் நகர்புறத்தில் வசிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் 58 சதவீதம் பேர் 2036ம் ஆண்டில் நகர்புறத்தில் வசிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நகர்புறங்களில் வீட்டு வசதி திட்டங்களை செயல்படுத்துவது மிகவும் சவாலானதாக உள்ளது. இதனால் பெருநகரங்களில் சாலையோரங்களில் வசிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே உள்ளது. ஆனால் இவர்களுக்கு மறு வாழ்வு கொள்கையை வகுப்பதில் மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்தாமல் உள்ளது. இதன்படி சென்னையில் 40 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பேர் சாலையோரம் வசிக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சாலையோரம் வசிப்பவர்களை மறு குடியமர்வு செய்யவும், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் ஒருங்கிணைந்த திட்டங்களை வகுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இது தொடர்பாக நகர்புற ஏழைகளுக்கான தகவல் மற்றும் ஆராய்ச்சி மையம் மற்றும் மதராஸ் சமூக சேவை பள்ளி இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சென்னையில் 2001ம் ஆண்டு 67,676 பேருக்கும், 2011ம் ஆண்டு 16,682 பேரும் சாலையோரம் வசித்தார்கள். 2018ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி 9087 பேர் சாலையோரம் வசித்து வருகின்றனர். தற்போது 40 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பேர் வரை வசிக்கலாம். இவர்களில் 29 முதல் 35 சதவீதம் பேர் குழந்தைகள். 3.71 சதவீதம் பேர் வயதானவர்கள். 44 சதவீதம் பேர் 30 ஆண்டுகளுக்கு மேல் சாலையோரங்களில் வசிக்கின்றனர்.

இவ்வாறு வசிக்கும் குழந்தைகளில் 5 வயது வரையுள்ள 66 சதவீதம் பேருக்கு அரசின் ஊட்டச்சத்து திட்டங்கள் சென்று சேரவில்லை. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் மூலம் செயல்படுத்தப்படும் ஊட்டச்சத்து திட்டங்கள், சுகாதார வசதிகள், மழலையர் பள்ளி செல்லும் வசதிகள் கிடைப்பதில்லை. 6 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளில் 19 சதவீதம் பேரும், 15 முதல் 18 வயது வரை உள்ளவர்களில் 42 சதவீதம் பேரும் கல்வியை தொடர முடியாத நிலை உள்ளது.

சுகாதார வதிகளின்படி பார்த்தால் 79 சதவீதம் பேர் பொது கழிவறைகளைத் தான் பயன்படுத்துகின்றனர்.

85 சதவீதம் பேர் பொது குழாய்களில் வரும் நீரைத்தான் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். 39 சதவீதம் பேர் உணவுகளை தாங்களே சமைத்து கொள்கின்றனர். 37 சதவீதம் வெளியில் உணவுகளை வாங்கி சாப்பிடுகின்றனர். சாலையோரம் வசிப்பவர்களில் 48 சதவீதம் பேருக்கு குடும்ப அட்டை இல்லை. 66 சதவீதம் பேருக்கு வங்கி கணக்கு இல்லை. சாலையோரம் வசிப்பவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 2013ம் ஆண்டு தேசிய நகர்புற வாழ்வாதார திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில் தமிழகத்தில் மொத்தம் 242 காப்பகங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் 159 காப்பகங்கள் செயல்பாட்டில் உள்ளது. சென்னையில் மட்டும் 51 காப்பகங்கள் உள்ளன. இந்த திட்டங்களுக்கு முறையான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான முறையில் திட்டங்களை செயல்படுத்தவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

என்ன தேவை?

* ஒருங்கிணைந்த மறுவாழ்வு கொள்கை

* திட்டங்களை செயல்படுத்த தனி நிதி

* உள்ளாட்சி அமைப்புகளில் தனி பிரிவு

* அரசு ஆவணங்களை பெற சிறப்பு மையம்

* அனைவருக்கும் நிலம்

* 80% தலித்துகள்

சென்னையில் சாலையோரம் வசிப்பவர்களில் 80 முதல் 90 சதவீதம் பேர் தலித்துகள் என்பது 2018ம் மற்றும் 2019ம் ஆண்டு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

Related Stories:

>