இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மமகவுடன் திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை: மதிமுக, விசிக உடன் இன்று மாலை நடக்கிறது

சென்னை: திமுக தொகுதி பங்கீடு தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மமகவுடன் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. இன்று மதிமுக, விசிக உடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தொகுதி பங்கீடு தொடர்பாக  திமுக, காங்கிரசுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வியாழக்கிழமை முதல் கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியது. தொடர்ந்து தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொது செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எ.வ.வேலு  கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு சென்னை அண்ணா அறிவாலாயத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அதன் தேசிய காதர் மொகைதீன், நவாஸ்கனி எம்பி, எம்எல்ஏ அபூபக்கர், பொருளாளர் எம்.எஸ்.ஷாஜகான் உள்ளிட் தலைவர்கள் கலந்து கொண்டனர். அதே போல மமகவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அதன் தலைவர் ஜவாஹிருல்லா, பொதுச்செயலாளர் அப்துல் சமது, பொருளார் சபிபுல்லா கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தேசிய தலைவர் காதர் மொய்தீன் அளித்த பேட்டியில், ” திமுக உடன் தொகுதி பங்கீடு குறித்து சுமுகமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. கடந்த முறை 5 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டதை திமுக தொகுதி பங்கீடு குழுவிற்கு நினைவுப்படுத்தினோம். எங்கள் எதிர்பார்ப்பை தெரிவித்தோம், திமுக அவர்கள் நிலையை தெரிவித்தது. நாளை(இன்று) மீண்டும் அறிவாலயம் வந்து தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும்” என்றார்.

மமக தலைவர் ஜவாஹிருல்லா அளித்த பேட்டியில், திமுக உடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. வர உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று மிகப்பெரிய தனிப்பெரும்பான்மை பெறும். எத்தணை இடங்கள் பற்றி மட்டுமே பேச்சுவார்த்தை நடைபெற்றது. கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 5 தொகுதி எண்ணிக்கையில் நாங்கள் கேட்டோம். அனைத்தும் நாளை(இன்று) இறுதி செய்யப்பட்டு திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிடுவார்” என்றார். இன்று மாலை மதிமுக, விசிக உடன் தொகுதி பங்கீடு தொடர்பாக ேபச்சு வார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.

Related Stories: