நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு அய்யா வைகுண்ட சுவாமியின் அவதார தின விழா ஊர்வலம்: 4ம் தேதி நடக்கிறது

தென்தாமரைகுளம்: சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதி சார்பில் நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு அய்யா வைகுண்ட சுவாமியின் அவதார தின விழா ஊர்வலம் வருகிற 4-ம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

குமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற திருத்தலங்களில் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியும் ஒன்றாகும். இங்கு வைகுண்டசாமியின் பிறந்த நாளான மாசி 20-ம் தேதியை அய்யாவழி மக்கள் அய்யா வைகுண்டசாமி அவதார தினமாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடி வருகிறார்கள். இந்த வருடம் 189 வது அவதார தின விழா வருகிற மார்ச் 4-ம் தேதி ( வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அவதார தின விழாவை முன்னிட்டு அன்று காலை நாகர்கோவிலிலிருந்து சாமிதோப்பு நோக்கி அவதார தின விழா ஊர்வலம் நடைபெறுகிறது.

விழாவின் முன் தினமான மார்ச் 3-ம் தேதி காலை 6 மணிக்கு திருச்செந்தூர், செந்தூர் பதியில் இருந்து நாகர்கோவிலை நோக்கி வாகன பேரணி புறப்படுகிறது. இந்த பேரணி திருச்செந்தூர், சீர்காய்ச்சி, திசையன்விளை, உடன்குடி, கூடன்குளம், செட்டிகுளம், ஆரல்வாய்மொழி வழியாக இரவு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்தடைகிறது. அதே தினம் காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் வடக்கு நடையில் இருந்து மற்றொரு வாகன பவனி நாகர்கோவிலை நோக்கி புறப்படுகிறது. இந்த வாகன பவனி திருவனந்தபுரம், பாறசாலை, குழித்துறை, மார்த்தாண்டம், தக்கலை, வெட்டூர்ணிமடம் வழியாக இரவு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை அடைகிறது. அதே தினம் பிற்பகல் 3 மணிக்கு சாமிதோப்பு தலைமை பதியிலிருந்து ஆதலவிளைக்கு மகாதீப ஊர்வலமும் நடக்கிறது.

மார்ச் 3ம் தேதி இரவு 8 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா திருமண மண்டபத்தில் மாசி மாநாடு நடக்கிறது. அதில் திருஏடு வாசிப்பும், அய்யாவழி அறிஞர்களின் சமய சொற்பொழிவும் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த அய்யா வழி பக்தர்கள் மார்ச் 3-ம் தேதி இரவு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலுக்கு வருகிறார்கள். அய்யா வைகுண்டசாமியின் 189 வது அவதார தினவிழா ஊர்வலம் மார்ச் 4-ம் தேதி காலை 6 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து சாமி தோப்பை நோக்கி புறப்படுகிறது. ஊர்வலத்திற்கு குரு பாலபிரஜாபதி அடிகளார் தலைமை வகிக்கிறார்.

இந்த ஊர்வலம் நாகர்கோவில், கோட்டாறு, இடலாக்குடி, சுசீந்திரம், வழுக்கம்பாறை, ஈத்தங்காடு, வடக்கு தாமரைகுளம் வழியாக சாமிதோப்பு தலைமை பதியை வந்தடைகிறது. ஊர்வலம் வரும் வழிகளில் பல மதத்தவர்கள், அய்யாவழி மக்கள் ஊர்வலத்திற்கு வரவேற்பு கொடுக்கின்றனர். அன்றிரவு சாமிதோப்பில் வாகன பவனியும்,  அய்யாவழி மாநாடும் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. நிகழ்ச்சிகள் அனைத்தும் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக, அரசின் வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு, பக்தர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி விட்டு, சுகாதார முறைகளை கடைப்பிடித்து ஊர்வலத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று பாலபிரஜாபதி அடிகளார் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories: