×

மத்திய சுகாதாரத் துறை வழிகாட்டுதலின்படி நாளை முதல் 27 கோடி மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி: தனியார் மருத்துவமனையில் ரூ.250 கட்டணம் வசூலிக்க அனுமதி

புதுடெல்லி: மத்திய சுகாதாரத் துறை வழிகாட்டுதலின்படி நாளை முதல் 27 கோடி மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கவுள்ளது. இதற்காக தனியார் மருத்துவமனையில் ரூ. 250 கட்டணம் வசூலிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசியானது முன்களப் பணியாளர்களுக்கு கடந்த ஜன. 16ம் தேதி முதல் இரண்டு தவணையாக போடப்பட்டது. நாளை முதல் (மார்ச் 1) அடுத்தகட்டமாக மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண் தலைமையில் மாநில சுகாதாரச் செயலர்களுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டன. பின்னர் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், ‘மார்ச் 1ம் தேதி (நாளை) முதல் மூத்த குடிமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

இதற்காக அவர்கள் தங்களது பெயர்களைப் பதிவு செய்து கொள்ளவேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்பும் பயனாளிகள் தாங்களாகவே ‘கோ-வின் 2.0’ இணையதளத்திலும், ‘ஆரோக்கிய சேது’ செயலியிலும் முன்பதிவு செய்யலாம். அதில், தடுப்பூசி போடப்படும் அரசு, தனியார் மருத்துவமனைகளின் பெயர்கள் இடம் பெற்றிருக்கும். அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், தனியார் மருத்துவ மனைகளில் கட்டணத்திலும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். கொரோனா தடுப்பூசி போடும் மையங்களில் போதிய இடவசதி உள்ளதையும், மருந்துகளுக்கான குளிர்சாதனப் பெட்டிகள் இருப்பதையும், போதிய ஊழியர்கள் இருப்பதையும் மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். பயனாளிகள் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, 45 முதல் 59 வயதைக் குறிப்பிடும் மருத்துவரின் சான்றிதழ், புகைப்படத்துடன் கூடிய பணியாளர் அடையாள அட்டை, தொழிலாளர் சான்றிதழ் என இதில் ஏதாவது ஒன்றைக் கொண்டு சென்றும் மாநில அரசு மையங்களில் நேரில் பதிவு செய்து தடுப்பூசியை போட்டுக் கொள்ள முடியும்.

இந்த நடைமுறைகளை மாநில அரசு எளிமையாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். மேலும், ஆஷா, மகளிர் சுயஉதவிக் குழுக்கள், பஞ்சாயத்து நிர்வாக பிரதிநிதிகள் ஆகியோரின் உதவியுடனும் கிராமங்களில் உள்ள முதியோரை அழைத்து வந்து குறிப்பிட்ட நாளில் தடுப்பூசி செலுத்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாக போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்த நிலையில் தற்போது தனியார் மருத்துவமனையில் கட்டணம் செலுத்தி போட்டுக் கொள்ளலாம் என்று அறிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘மத்திய சுகாதாரத் துறையின் வழிகாட்டுதலின்படி ​தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசிக்கு ரூ.250 வரை கட்டணம் வசூலிக்க முடியும். தடுப்பூசி மையத்தின் பயனாளிகள் கட்டணமாக ரூ. 150, தடுப்பூசி சேமிப்பு, பாதுகாப்ப காரணங்களுக்காக ஒரு நபருக்கு ரூ.100 வரை வசூலிக்க முடியும். அடுத்த உத்தரவு வரும் வரை, இந்த கட்டணத்தை வசூலிக்க முடியும். ஏற்கனவே போடப்பட்ட தடுப்பூசிகளுக்கு சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டுக்கு ஒரு டோஸ் ரூ.200, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சினுக்கு ஒரு டோஸ் ரூ.295 வரை மத்திய அரசு செலுத்தியது.

அதேநேரத்தில் அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசியானது இலவசமாக கிடைக்கும். நாடு முழுவதும் 27 கோடி மக்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி போட மதிப்பிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சுமார் 10 கோடி மக்களுக்கு போடப்படும். தடுப்பூசியை மத்திய அரசிடம் இருந்து பெற்று தனியார் மருத்துவமனைகளுக்கு மாநில அரசு வழங்கும். தடுப்பூசி பெறுவதற்காக தனியார் மருத்துவமனைகள் மாநில அரசிடம் குறிப்பிட்ட தொகையை டிபாசிட் செய்ய வேண்டும். இரண்டாகம் கட்ட தடுப்பூசி போட்டு முடித்தவுடன், மூன்றாம் கட்ட தடுப்பூசியை செயல்முறையை விரைவுபடுத்த மத்திய அரசு ஆர்வமாக இருப்பதால், தனியார் சுகாதாரத் துறையை அதிகளவில் ஈடுபடுத்த உள்ளது. இதற்காக, தனியார் துறை சுகாதார ஊழியர்களுக்கு போதுமான பயிற்சி அளிக்கப்படும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சுமார் 10,000 தனியார்  மருத்துவமனைகளும், மத்திய அரசு சுகாதார திட்டத்தின் கீழ் 600க்கும் மேற்பட்ட  மருத்துவமனைகளும், மாநில அரசுகளின் சுகாதார காப்பீட்டு திட்டங்களின்  கீழ் ‘எம்பனேல்’ செய்யப்பட்ட பிற தனியார் மருத்துவமனைகளும் தடுப்பூசி மையங்களாக செயல்படும். பொது சுகாதார வசதிகள் கொண்ட 10,000க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் இலவசமாக போடப்படும்’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து, மகாராஷ்டிராவின் தலைமை நிர்வாக அதிகாரி சுதாகர் ஷிண்டே கூறுகையில், ‘மாநில அரசின் மகாத்மா ஜோதிபா புலே ஜான் ஆரோக்ய யோஜனாவின் கீழ் ‘எம்பனேல்’ செய்யப்பட்ட தனியார் மருத்துவமனைகள் வரும் வாரத்தில் தடுப்பூசியை போடும். முதலில் கோவிஷீல்டு மட்டும் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும். காரணம், கோவாக்சினை காட்டிலும் கோவிஷீல்டு நிறைய கிடைக்கிறது’ என்றார்.

இதுவரை 1.42 கோடி பேர்
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், நேற்று வரை தமிழகத்தில் 4,45,328 பேர், புதுச்சேரியில் 11,144 பேர் உட்பட நாடு முழுவதும் 1,42,42,547 பயனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதற்கான 2,92,312 முகாம்களில் 66,68,974 சுகாதாரப் பணியாளர்களுக்கும் (முதல் டோஸ்), 24,53,878 சுகாதாரப் பணியாளர்களுக்கும் (இரண்டாவது டோஸ்), 51,19,695 முன்களப் பணியாளர்களுக்கும் (முதல் டோஸ்) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் 42ம் நாளில் (நேற்று) 13,397 முகாம்களில் 7,64,904 பயனாளிகளுக்கு (3,49,020 பயனாளிகளுக்கு முதல் டோஸ், 4,20,884 பயனாளிகளுக்கு இரண்டாவது டோஸ்) நாடு முழுவதும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

20 வகையான நோயாளிக்கு தடுப்பூசி
கடந்த ஓராண்டில் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், இதயநோயால் பாதிக்கப்பட்டவர், தமனி நோய், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், நுரையீரல் தமனி உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் ஹெமாட்டோபாய்டிக் ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்பட்ட நோயாளிகள், ஹீமோடையாலிசிஸ் அல்லது சிஏபிடியில் சிறுநீரக நோய் பாதித்தவர்கள், சிதைந்த சிரோசிஸ், கடுமையான சுவாச நோய், லிம்போமா/லுகேமியா/மிலோமா, ஜூலை 1, 2020 அன்று அல்லது அதற்குப் பிறகு புற்றுநோய் பாதிப்பு அல்லது சிகிச்சை பெறுவோர், சிக்கிள் செல் நோய்/போம் மஜ்ஜை பலவீனம்/அப்பிளாஸ்டிக் அனீமியா/தலசீமியா போன்ற நோய்கள், முதன்மை நோய் எதிர்ப்பு குறைபாடுய்/எச்.ஐ.வி தொற்று, இயலாமை/தசைநார் டிஸ்டிராபி/தொழில்நுட்ப குறைபாடுகள்/பார்வை குறைபாடு/ காது கேளாமை போன்றவற்றால் ஏற்பட்ட சுவாச மண்டல குறைபாடு உடையவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையின்படி தடுப்பூசி ேபாட்டுக் கொள்ளலாம்.

Tags : Federal Health Department , Federal Department of Health, 7 crore senior citizens, vaccinated
× RELATED இதுவரை போட்டது 27 கோடி டோஸ் தடுப்பூசி: மத்திய சுகாதார துறை தகவல்