வாய்ப்பு முன்னாள் அமைச்சருக்கா? இந்நாள் எம்எல்ஏவுக்கா? செய்யாறு சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட அதிமுகவில் கடும் போட்டி: பாமக அன்புமணி மனைவிக்கும் சீட் கேட்டதால் அதிர்ச்சி

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் வந்தவாசி (தனி), செங்கம் (தனி), தண்டராம்பட்டு, திருவண்ணாமலை, கலசபாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு, பெரணமல்லூர் என்று 9 தொகுதிகள் இருந்து வந்துள்ளன. தொகுதி சீரமைப்பின் கீழ் பெரணமல்லூர், தண்டராம்பட்டு ஆகிய தொகுதிகள் நீக்கப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டத்தின் 2வது வருவாய் கோட்டமாக செய்யாறு ெதாகுதி உள்ளது. இந்த தொகுதியானது ஒருங்கிணைந்த வட ஆற்காடு மாவட்டமாக (வேலூர்- திருவண்ணாமலை) இருந்த போது 1952ல் உருவாக்கப்பட்ட தொகுதியாகும். இத்தொகுதியில் 1985ல் இடைத்தேர்தலும் நடைபெற்று உள்ளது.  செய்யாறு தொகுதியைச் சுற்றி காஞ்சிபுரம், ஆரணி, ஆற்காடு ஆகிய தொகுதிகளும், வந்தவாசி தனி தொகுதியும் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க செய்யாறு தொகுதியில் செய்யாறு மற்றும் வெம்பாக்கம் என்று 2 தாலுகாக்கள், செய்யாறு (திருவத்திபுரம்) நகராட்சியும் அமைந்துள்ளன. செய்யாறு ஒன்றியத்தில் 53 ஊராட்சிகளும், வெம்பாக்கம் ஒன்றியத்தில் 63 ஊராட்சிகளும், அனக்காவூர் ஒன்றியத்தில் 55 ஊராட்சிகள் உள்பட 222 வருவாய் கிராமங்களும் உள்ளன. அதேபோல் திருவத்திபுரம் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன.செய்யாறு சட்டப்பேரவை தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,26,686 பேரும், பெண் வாக்காளர்கள் 1,32,544 பேரும், மூன்றாம் பாலித்தவர் ஒருவர் என்று மொத்தம் 2,59,231  வாக்காளர்கள் உள்ளனர். கடந்த தேர்தலில் 308 வாக்குச்சாவடிகள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது இத்தொகுதியில் மொத்தம் 317 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இத்தொகுதியில் 83 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று பதியப்பட்டு உள்ளது.

செய்யாறு தொகுதியை ெபாறுத்தவரையில், வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட  அதிமுகவில் கடும் போட்டிகள் தொடங்கிவிட்டது. இதில் தற்போது சிட்டிங் எம்எல்ஏவாகவும், மாவட்ட செயலாளராகவும் உள்ள தூசி.கே.மோகன் கடந்த 5ஆண்டுகளில் செய்யாறு தொகுதிக்கான அனைத்துத் திட்டங்களையும் கொண்டு வந்து தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றி உள்ளேன். இந்த முறையும் எனக்குத் தான் சீட்டு வேண்டும் என்று தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறாராம். அதேபோல் அதிமுக முன்னாள் அமைச்சரும், அமைப்பு செயலாளரும், வேலூர் மண்டல தேர்தல் பொறுப்பாளராக உள்ள முக்கூர் என்.சுப்பிரமணியன் அமைச்சராக இருந்த ேபாது தொகுதி மக்களின் தேவைகளை அறிந்து மாவட்ட மருத்துவமனை, அரசு பாலிடெக்னிக் கல்லூரி, நெடுஞ்சாலை கோட்ட அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்ததை மக்கள் நினைத்துப் பார்க்கிறார்கள். கட்சி மேலிடத்திலும் செல்வாக்கு உள்ளதால் நிச்சயம் சீட்டு வாங்கி விடுவேன் என்று உறுதியாக கூறி வருகிறாராம்.

செய்யாறு நகராட்சியில் 2 முறை சேர்மனாகவும் 2006ல் சட்டசபைத் தேர்தலில் செய்யாறு தொகுதியில் முதல் பெண் வேட்பாளராக நின்று வெற்றி வாய்ப்பு இழந்ததால், தற்போது நிச்சயம் எனக்கு தான் வாய்ப்பு கிடைக்கும் என்று பாவை ரவிச்சந்திரன் கூறி வருகிறார். அதேபோல் இடைத்தேர்தலில் வெற்றிப் பெற்ற எம்ஜிஆரின் அனுதாபியும், குப்புசாமியின் மகனுமான நகர அம்மா பேரவை செயலாளராக உள்ள கே.வெங்கடேசன் கட்சி தலைமையில் உள்ள செல்வாக்கினால் நிச்சயம் நான், சீட்டு வாங்கி விடுவேன் என்கிறார். அதிமுகவில் இந்த முறை படித்த இளைஞர்களுக்குத் தான் வாய்ப்பு என்று கூறி வரும் நிலையில் மாவட்ட மாணவரணி செயலாளராக உள்ள 38 வயதுடைய இ.சுரேஷ்நாராயணன் எனக்குத் தான் சீட் கிடைக்கும் என்று கூறி வருகிறார். அதே போல் வெம்பாக்கம் ஒன்றியக்குழுத் தலைவர் டி.ராஜூ, இளைஞர் பாசறை செயலாளர் எஸ்.திருமூலன், தொழிற்சங்க செயலாளர் அ.அருணகிரி, வர்த்தக அணி செயலாளர் ஜி.கோபால் என்று செய்யாறு தொகுதியில் சீட் கேட்டு போட்டியிடுபவர்களின் பட்டியல் நீண்டுக் கொண்டே செல்கிறது.

அதிமுகவில் சீட் கேட்கும் போட்டி இப்படி இருக்க, கூட்டணியில், செய்யாறு தொகுதியில் பாமக சார்பில் சவுமியா அன்புமணிக்கு சீட் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு பாமக முன்னாள் எம்எல்ஏ கணேஷ்குமாரும் செய்யாறு தொகுதியில் சீட் கேட்டுள்ளதாக பேசப்படுகிறது. இதனால் அதிமுகவினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் இந்த போட்டியில் தூசி.கே.மோகன், முன்னாள் அமைச்சர் முக்கூர்.சுப்பிரமணியன் முந்தி ஓடிக்கொண்டிருக்கின்றனர். இப்படி அதிமுகவில் சீட்டுக்கு நடக்கும் போட்டியால், தேர்தல்களம் ஏற்கனவே சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. தற்போது தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டதால், மேலும் ஆளும்கட்சியினர் பரபரக்க தொடங்கி விட்டனர்.

செய்யாறு தொகுதி மக்களின் எதிர்பார்ப்பு

* செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும்.

* மக்களின் குடிநீர் பூர்த்தி செய்யும் வகையில் வேலூர் கூட்டு குடிநீர் திட்டத்தை செய்யாறு தொகுதி வரையில் நீட்டித்து செயல்படுத்திட வேண்டும்.

* செய்யாறு வழியாக தென்மாவட்டங்களுக்கு தொலை தூர போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டும். ஊரகப் பகுதி மாணவிகளின் நலன் கருதி செய்யாறு தொகுதியில் அரசு மகளிர் கலைக்கல்லூரி வேண்டும். செய்யாறு மாவட்ட தலைமை மருத்துவமனையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். சிறப்பு மருத்துவர்கள், டெக்னீசியன்களை நியமிக்க வேண்டும். அல்ட்ரா சி.டி.ஸ்கேன் வசதியையும் ஏற்படுத்த வேண்டும்.

* மருத்துவக்கல்லூரி மற்றும் பி.எஸ்.சி நர்சிங் கல்லூரி தொடங்கிட வேண்டும்.

* செய்யாறு ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயிலை சுற்றுலாத்தலமாக்க வேண்டும்.     

* தமிழகத்தில் அதிகளவில் அரிசி உற்பத்தி செய்ததில் திருவண்ணாமலை மாவட்டம் முதலிடம், குறிப்பாக செய்யாறு தொகுதியில் அதிக அளவில் நெல் பயிரிடப்பட்டு கொள்முதல் செய்யப்படுவதால் இப்பகுதியில் வேளாண் கல்லூரியும், தோட்டக்கலை கல்லூரியும் தொடங்க வேண்டும்.

* செய்யாறு, வெம்பாக்கம் வட்டங்களில் அரசு தொழிற்பயிற்சிக் கூடம் அமைக்க வேண்டும்.  

* வெம்பாக்கத்தில் புதியதாக தீயணைப்பு நிலையம், காவல்நிலையம், பேரூராட்சி, கருவூலம், கூடுதல் போக்குவரத்து வசதி ஏற்படுத்தி புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும். செய்யாறு (திருவத்திபுரம்) நகராட்சியில் அறிவிப்போடு நின்றுபோன பாதாள சாக்கடை திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இப்படி தொகுதிமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் ஏராளம் உள்ளன.

Related Stories: