ஆற்காடு அருகே தேர்தல் நடத்தை விதிமீறி 45 பயனாளிகளுக்கு இலவச ஆடுகள்: அதிகாரி வழங்கியதால் பரபரப்பு

ஆற்காடு: ஆற்காடு அருகே தேர்தல் நடத்தை விதிகளை மீறி கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நேற்று 45 பயனாளிகளுக்கு இலவச ஆடுகள் வழங்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் என நேற்று முன்தினம் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இந்நிலையில், நேற்று மதியம் தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறை, தேசிய கால்நடை இயக்ககம், தமிழ்நாடு ஊரக புழக்கடை செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் திமிரி ஊராட்சி ஒன்றியம் புங்கனூரை சேர்ந்த 31 பேருக்கும், திமிரியை சேர்ந்த 14 பேருக்கும் வழங்கப்பட்டது.

பொதுவாக இந்நிகழ்ச்சிகள் கால்நடை மருத்துவமனை அருகில் நடைபெறும். ஆனால் நேற்று திமிரி குமரகிரி முருகன் கோயில் அருகில் தனியாருக்கு சொந்தமான கோழிப்பண்ணை வளாகத்தில் பயனாளிகளுக்கு இலவச ஆடுகளை கால்நடைத்துறை உதவி இயக்குனர் பாஸ்கர் வழங்கினார். இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், அரசின் திட்டத்தின் கீழ் இலவச ஆடுகளை எப்படி வழங்கலாம்? என்று கேள்வி எழுப்பினர். ஆனால் அதற்குள் 45 பயனாளிகளுக்கும் இலவச ஆடுகள் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், அதை மீறி நடந்துள்ள இச்சம்பவம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு புகார் அனுப்பும் நடவடிக்கைகளை அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மேற்கொண்டுள்ளனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: