சட்டமன்ற தேர்தலையொட்டி தேனி மாவட்டத்தில் 1,561 வாக்குச்சாவடி மையங்கள் அமைப்பு

*  306 பதற்றமானவை; தேர்தல் புகார்களுக்கு 1950

* தேர்தலை கண்காணிக்க தொகுதிக்கு 3 பறக்கும் படை

தேனி: சட்டமன்ற தேர்தலையொட்டி, தேனி மாவட்டத்தில் 1,561 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தேனி மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணனுண்ணி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி), போடி, கம்பம் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. ஆண்டிபட்டி தொகுதியில் 2 லட்சத்து 75 ஆயிரத்து 931 வாக்காளர்களும், பெரியகுளம் தொகுதியில் 2 லட்சத்து 85 ஆயிரத்து 31 வாக்காளர்களும், போடி தொகுதியில் 2 லட்சத்து 77 ஆயிரத்து 964 வாக்காளர்களும், கம்பம் தொகுதியில் 2 லட்சத்து 85 ஆயிரத்து 574 வாக்காளர்களும் உள்ளனர். மாவட்டத்தில் 5 லட்சத்து 51 ஆயிரத்து 826 ஆண் வாக்காளர்கள், 5 லட்சத்து 72 ஆயிரத்து 479 பெண் வாக்காளர்கள், 195 இதர வாக்காளர்கள் என மொத்தம் 11 லட்சத்து 24 ஆயிரத்து 500 வாக்காளர்கள் உள்ளனர்.

வாக்குச்சாவடி மையங்கள்: வருகிற சட்டமன்றத் தேர்தலில் தேனி மாவட்டத்தில் 1,221 முதன்மை வாக்குச்சாவடிகள், 340 துணை வாக்குச்சாவடிகள் என மொத்தம் 1,561 வாக்குச்சாவடி மையங்கள் 576 இடங்களில் அமைக்கப்பட உள்ளன. இதில் 306 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. கண்காணிப்புக்குழுக்கள்:தேர்தலை கண்காணிக்க தொகுதிக்கு தேர்தல் பறக்கும்படை 3 அணி வீதம் 4 தொகுதிகளுக்கும், 12 படைகளும், ஆண்டிபட்டி தொகுதிக்கு மட்டும் ஒரு படை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர நிலையான கண்காணிப்புக்குழு தொகுதிக்கு 3 குழு வீதம், ஆண்டிபட்டிக்கு மட்டும் 4 குழுஎன மொத்தம் 13 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.வீடியோ கண்காணிப்புக் குழுவானது சட்டமன்றத் தொகுதிக்கு தலா 2 குழு வீதம் மொத்தம் 8 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வீடியோ பார்வையாளர் குழுவை பொறுத்தவரை தொகுதிக்கு ஒரு அணி வீதம் மொத்தம் 4 அணிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கட்டுப்பாட்டு அறை: தேர்தல் தொடர்பான புகார்களை உடனடியாக தெரிவிக்க, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறைக்கு 1950 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். வாக்குச்சாவடி அலுவலர்கள்: தேர்தல்பணியில் ஈடுபட வாக்குச்சாவடி அலுவலர்களாக 7 ஆயிரத்து 496 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், பதற்றமான 306 வாக்குச்சாவடி மையங்களில் 306 நுண்மேற்பார்வையாளர்களும் நியமனம் செய்யப்பட உள்ளனர். வாக்குப்பதிவு இயந்திரங்கள்: தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தேர்தலுக்கும் 2008 மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2702 பேலட் யூனிட் இயந்திரங்கள், 2 ஆயிரத்து 91 விவிபேட் இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன. தபால் வாக்காளர்கள்: தேனி மாவட்டத்தில் தபால் முறையில் வாக்களிக்க தகுதியானவர்களான 80 வயதுக்கு மேற்பட்டவர்களாக 24 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் தவிர மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும் தபால் முறையில் வாக்களிக்க தகுதிபடைத்தவர்கள் என்பதால் இது குறித்தும் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது’ என்றார்.

Related Stories:

>