வலங்கைமான் சுள்ளன் ஆறு பகுதியில் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

வலங்கைமான்: வலங்கைமான் பேரூராட்சிக்குட்பட்ட சுள்ளன் ஆறு பகுதியில் வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் வால்வில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்து குடி தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேதாரண்யம் மற்றும் வழியோர கிராமங்கள்பயன் பெறும் விதமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்த பட்டது. இத்திட்டத்தில் கீழ் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் விதமாக கொள்ளிடம் ஆற்றில் கிணறுகள் அமைக்கப்பட்டு வலங்கைமான் மன்னார்குடி சாலை வழியாக குழாய்கள் மூலம் தண்ணீர் வேதாரண்யம் வரை கொண்டு செல்லப்படுகிறது. வலங்கைமான் நீடாமங்கலம் சாலை விரிவாக்கத்தினால் குடிநீர் குழாய்கள் சாலை மத்தியில் வாகனங்கள் அதிகம் செல்வதால் அடிக்கடி சாலையில் குழாய் உடைப்பு ஏற்படுவதும் அவற்றை சரி செய்வதும் தொடர்கதையாக உள்ளது.

கடந்த சில நாட்களாக வலங்கைமான் நீடாமங்கலம் சாலையில் குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமாக உடைப்பு சரி செய்யப்பட்டு வருகிறது. தற்சமயம் ஆலங்குடி ஞானபுரி கோயில் அருகில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்யும் பணியில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஈடுபட்டனர். இதனால் குடி தண்ணீர் விநியோகம் கடந்த சில நாட்களாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது. அதனை அடுத்து மீண்டும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்ட நிலையில் வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்டபகுதியில் வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்ட குழாயின் வால்வு பகுதி வழியே பெரிய அளவில் குடிதண்ணீர் வெளியேறி வருகிறது. அதை உடனடியாக சரி செய்ய குடிநீர் வடிகால் வாரியம் முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: