அத்தனாவூர் கால்நடை மருத்துவமனையில் டாக்டர் முழுநேரம் பணியில் இருக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

ஜோலார்பேட்டை: அத்தனாவூர் கால்நடை மருத்துவமனையில் டாக்டர் முழுநேரம் பணியில் இருக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் உள்ள 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். இங்கு ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளிக்கூடங்கள், கால்நடை மருத்துவமனை,  காவல் நிலையம் உள்ளது. இதனால், அங்குள்ள மக்கள் அனைத்து விதமான பணிகளையும் ஏலகிரி மலையிலேயே பயன்படுத்திக்கொள்கின்றனர். கால்நடை பராமரிப்புக்காக அமைக்கப்பட்ட அத்தனாவூர் கால்நடை மருத்துவமனையில் விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளுக்கு சிகிச்சை பெறுகின்றனர். இதில், டாக்டர் மற்றும் உதவியாளர்கள் தினமும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும்,  கால்நடைகளை மருத்துவமனைக்கு கொண்டுவரமுடியவில்லை என்றால் டாக்டர்கள் அங்கு சென்று சிகிச்சை அளிகின்றனர்.

இந்நிலையில், கொட்டையூரை சேர்ந்த ஜெயக்குமார் கடந்த வாரம் சினை மாடு ஒன்று வாங்கினார். அது நேற்று முன்தினம் கன்று ஈன்றது. பின்னர், மாடு எழுந்து நிற்க முடியாமல் அவதிப்பட்டது. இதுகுறித்து ஜெயக்குமார் கால்நடை டாக்டருக்கு போனில் தகவல் தெரிவித்தார். அதற்கு டாக்டர் தான் வெளியில் இருப்பதாக கூறி செல்போனை துண்டித்தார். நேற்று காலை முதல் மாலை வரை டாக்டரின் செல்போனை சுவிட்ச் ஆப் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர், மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது மருத்துவமனை மூடப்பட்டிருந்தது. இதையடுத்து, வாணியம்பாடியை சேர்ந்த ஒரு கால்நடை டாக்டருக்கு தகவல் தெரிவித்து சிகிச்சை அளித்தார். ஆனால், இதுவரை மாட்டின்  நிலை மோசமாகி வருகிறது. மலைவாழ் மக்கள் ஆயிரக்கணக்கில் ஆடு, மாடு, கோழிகளை பராமரித்து வாழ்வாதாரத்தை பெருக்க கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் அரசு கால்நடை மருத்துவமனை அமைத்தும் பயனின்றி டாக்டர்கள் பணியில் இல்லை. அப்படியே இருந்தாலும் காலை 10 முதல் 12 மணி வரை இருப்பதாக அப்பகுதிமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

எனவே, துறை அதிகாரிகள் கால்நடை மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் மீது உரிய நடவடிக்கை எடுத்து ஏலகிரி மலையில் முழுநேரமும் கால்நடை டாக்டர் பணியில் ஈடுபட வேண்டும் என்று அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>