விளவங்கோடு தொகுதியில் போட்டியிட காய் நகர்த்தும் கட்சிகள்

தமிழகத்தின் தென்கோடியில் கேரளாவை ஒட்டி அமைந்துள்ளது விளவங்கோடு  சட்டமன்ற தொகுதி. கடந்த 2016 சட்டமன்ற தேர்தல் ஜெயலலிதா சந்தித்த கடைசி தேர்தலாக இருந்தது. அந்த தேர்தலில் தமிழகத்தில் தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைத்த அதிமுக, விளவங்கோடு தொகுதியில் டெபாசிட்டை இழந்தது.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நடந்த அனைத்து தேர்தல்களிலும் இங்கு காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் மட்டுமே வென்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாஜ வாக்காளர்கள் இங்கு அதிகம் என்பதால் மாநில கட்சிகள் போட்டியிடுவதை தவிர்த்து வருகின்றன. இந்த தொகுதியில் 1984, 1989, 1991 சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் வேட்பாளர் சுந்தரதாஸ் வெற்றி பெற்றார். 1996, 2001 தேர்தல்களில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் டி.மணியும், 2006 தேர்தலில் ஜாண் ஜோசப்பும் வெற்றிபெற்றனர். 2011, 2016 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜயதரணி வெற்றிபெற்றார். திமுக, காங்கிரஸ் கூட்டணியில்  மீண்டும் தனக்கே வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விஜயதரணி எம்எல்ஏ தொகுதியில் வலம் வருகிறார். ஆனால் தொகுதிக்கு உட்பட்டவர்களுக்கு இந்தமுறை வாய்ப்பளிக்க வேண்டும் என்ற குரல் காங்கிரஸ் கட்சியில் எழுந்துள்ளது.

இந்த தொகுதிக்காக மாநில காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் டாக்டர் தம்பி விஜயகுமார், பஞ்சாயத்து ராஜ் சங்கேதன் மாவட்ட தலைவர் டாக்டர் சாமுவேல் ஜார்ஜ், மாவட்ட ஓபிசி தலைவர் ஸ்டூவர்ட், சிறுபான்மை பிரிவு தலைவர் செல்வகுமார்,  மாநில மகிளா காங்கிரஸ் துணைத்தலைவர் லைலா ரவிசங்கர், முன்னாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரமேஷ்குமார், சேவாதள தலைவர் ஜோசப் தயாசிங் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். திமுக கூட்டணியில் மாநில தலைமை மூலம் விளவங்கோடு தொகுதியை பெறும் முயற்சியில் மார்க்சிஸ்ட் கட்சியும் பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். குமரி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட்  கட்சிக்கு ஒரு தொகுதி உறுதி என திமுக, காங்கிரஸ் தலைவர்களும் கூறி வருகிறார்கள். விளவங்கோடு அல்லது பத்மநாபபுரம் தொகுதி தங்களுக்கு கிடைப்பது உறுதி என கட்சி நிர்வாகிகளும் நம்பிக்கையில் உள்ளனர்.

விளவங்கோடு தொகுதி மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டால் முன்னாள் எம்எல்ஏ லீமாரோஸ் அல்லது மாவட்ட செயலாளர் செல்லச்சாமிக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் அதிமுக டெபாசிட் இழந்ததால் இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இந்த தொகுதியை பாஜகவுக்கு தள்ளி விடும் வாய்ப்புகளே அதிகம் உள்ளது என தெரிகிறது. பா.ஜ சார்பில் மாவட்ட தலைவர் தர்மராஜ் அல்லது முன்னாள் உண்ணாமலைக்கடை பேரூராட்சி தலைவர் ஜெயசீலனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என பாஜவினர் தெரிவிக்கின்றனர். இருப்பினும் அதிமுகவிலும் சிலர் போட்டியிட ஆர்வம் தெரிவித்துள்ளனர். தொகுதியில் பா.ஜ.,வுக்க கணிசமான வாக்கு உள்ளது. உறுதியான கூட்டணி என்பதால் வெற்றி பெறலாம் என்று அவர்கள் கருதுகின்றனர். அதிமுக குழித்துறை நகர தலைவர் ராஜன் இந்த தொகுதியில் சீட்டு பெறுவதற்காக கடுமையான முயற்சி மேற்கொண்டு வருகிறார் மார்த்தாண்டம் மார்க்கெட் வியாபாரியான இவர் ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டு மக்களுடன் தொடர்புடையவர். அண்ணா தொழிற்சங்க மேற்கு மாவட்ட செயலாளர் பீட்டர் சீட் பெறுவதற்காக கடுமையான முயற்சி மேற்கொண்டிருக்கிறார் இவர் சிறுபான்மை பிரிவு மாவட்ட இணைச்செயலாளர் ஆகவும் ஆயர் பேரவை உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.

Related Stories: