குதிரை ரேசில் முந்துவது யார்? ஸ்ரீவை. தொகுதிக்கு அதிமுகவினர் கடும் போட்டி : பாஜவின் நெருக்கடிக்கு பணியுமா ஆளுங்கட்சி

தூத்துக்குடி  மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம்,  திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய 6 சட்டமன்ற  தொகுதிகள் உள்ளன. இந்த 6 சட்டமன்ற தொகுதிகளில் வற்றாத ஜீவநதியான  தாமிரபரணி நதியின் கரையோரம் அமைந்துள்ளது ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி. சாத்தான்குளம் தொகுதி மறுவரையின் போது நீக்கப்பட்டதால் சாத்தான்குளம் தொகுதியில் இடம்பெற்றிருந்த பல பகுதிகள் தற்போது ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் ஒட்டிக் கொண்டன. சாத்தான்குளம், கருங்குளம், செய்துங்கநல்லூர், வல்லநாடு என திருச்செந்தூர் சாலை, தூத்துக்குடி சாலையில் பல பகுதிகளை உள்ளடக்கியுள்ளது ஸ்ரீவைகுண்டம் தொகுதி. ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் நெல் மற்றும் வாழை விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இங்கிருந்து சாகுபடி ஆகும் வாழைத்தார்கள் தினந்தோறும் சென்னை, கோவை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு செல்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரும்பாலும் விவசாயத்தை தான் தொழிலாக நம்பியுள்ளனர். எனினும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் வேலைவாய்ப்புகளை  தரும் தொழில் நிறுவனங்கள் எதுவும் இல்லை.

தாமிரபரணி  ஆற்றில் மழைக்காலம் முழுவதும் தண்ணீர் வீணாக கடலுக்கு செல்லும் நிலையில், கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் கடந்த 15 ஆண்டு காலமாக முப்போக நெற்பயிர்  சாகுபடி முடங்கி விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இத்தகைய சூழ்நிலையில்  விரைவில் தமிழக சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், விவசாயிகள் நிறைந்துள்ள ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் களம் இறங்குவதற்கான பணிகளை அரசியல் கட்சியினர்  தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியை  பொறுத்தவரை அதிமுகவும், காங்கிரஸ் கட்சியும் நேரடியாக மோதும் சூழலே இதுவரை  இருந்து வந்துள்ளது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியை பொறுத்தவரை இங்கு  அதிமுகவே மீண்டும் போட்டியிடும் என தெரிகிறது.  அதிமுக சார்பில்  தற்போதைய தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான  எஸ்.பி.சண்முகநாதன் தான் மீண்டும் போட்டியிடுவார் என அதிமுகவினர் பலரும் கூறுகின்றனர். அதற்காக தேர்தல் பணிகளை  மேற்கொண்டுள்ளனர்.

இவர், கடந்த 2001ம் ஆண்டு முதல் இதுவரை நடந்துள்ள 4  தேர்தல்களில் போட்டியிட்டு 3 முறை வெற்றி பெற்றுள்ளார். 2006ம்  ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மட்டும் தோல்வி அடைந்துள்ளார். 2001ம் ஆண்டு வெற்றி பெற்று முதன் முதலாக கைத்தறித்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். ஆனால் 9 மாதங்கள் மட்டுமே அமைச்சர் பதவி வகித்தார். எனினும் 2006ம் ஆண்டு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. அப்போது காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி செல்வராஜிடம் போட்டியிட்டு வாய்ப்பை இழந்தார். இதைத் தொடர்ந்து 2011ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். அப்போதும் அமைச்சராக பதவியேற்று சிறிது காலம் அமைச்சராக பதவி வகித்தார். 2016ம் ஆண்டு தேர்தலிலும் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார். இந்துசமய அறநிலையத்துறை மற்றும் பால்வளத்துறை அமைச்சராக  நியமிக்கப்பட்டு குறுகிய காலங்கள் பதவி வகித்துள்ளார். பின்னர் அதிமுக மாவட்ட செயலாளர் பதவி கிடைத்தது. இன்று வரை மாவட்ட செயலாளர் பதவியில் தொடர்கிறார். இதனால் 5வது முறையாக களத்தில் குதிக்க முடிவு செய்துள்ளார்.

இந்த  தொகுதியில் இவரைத் தவிர அதிமுக சார்பில் போட்டியிட, மாவட்ட கவுன்சிலர்  அழகேசன், சாத்தான்குளம் முன்னாள் யூனியன் சேர்மன் ஆனந்தராஜா,  ஆழ்வார்திருநகரி ஒன்றிய செயலாளரும், முன்னாள் யூனியன் சேர்மனுமான  விஜயகுமார், ஆவின் முன்னாள் துணை சேர்மனும், கருங்குளம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளருமான செங்கான், சாத்தான்குளம் ஒன்றிய செயலாளர் சவுந்தரபாண்டியன், முதலூர்  பஞ்சாயத்து தலைவர் பொன்முருகேசன் உள்ளிட்ட சிலரும் சீட் பெற காய் நகர்த்தி வருகின்றனர். இதேநேரத்தில்,  ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிட சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில்  வசித்து வரும் இத்தொகுதியை சேர்ந்த வசதி படைத்த அதிமுக பிரமுகர்கள் சிலரும் முயன்று  வருகின்றனர். மேலும், இந்த தொகுதியை கூட்டணி கட்சிகளான பாஜ, தேமுதிக,  தமாகாவும் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.

பாஜ சாத்தான்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வலுவாக உள்ளது. எனவே ஸ்ரீவைகுண்டம் தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என கேட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அதிமுக தொடர்ந்து இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வருவதால் கூட்டணி கட்சியான பாஜவுக்கு விட்டுக் கொடுக்காது என அதிமுகவினர் நம்புகின்றனர். கூட்டணியில் தொகுதி பங்கீடு, பாஜவின் நெருக்கடி ஆகியவற்றை தாண்டி அதிமுக இந்தத் தொகுதியில் போட்டியிட முட்டி மோதி வருகிறது. தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதிமுகவினர் சீட் பெற எடப்பாடி, ஓபிஎஸ் ஆகிய தலைவர்கள் மூலம் காய் நகர்த்தி வருகின்றனர்.  

பெண் வாக்காளர்கள் கையில் முடிவு

ஸ்ரீவைகுண்டம்  சட்டமன்ற தொகுதியில் இறுதி வாக்காளர் பட்டியல்  அடிப்படையில் மொத்தம் 2 லட்சத்து 23 ஆயிரத்து 764 வாக்காளர்கள் உள்ளனர்.  இதில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 132 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 13 ஆயிரத்து  622 பெண் வாக்காளர்களும், 10 மூன்றாம் பாலினத்தவர்களும் உள்ளனர். கடந்த முறை  3 ஆயிரத்து 500 வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றி வாய்ப்பு இருந்தது. பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ள இந்தத் தொகுதியில் பெண் வாக்காளர்கள் கையில் முடிவு உள்ளதாக தொகுதி முழுவதும் பேசப்படுகிறது.

Related Stories:

>